ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு ஆயுதப் படைகளை பாராட்டி தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் பே...
பாஜக பிரமுகா்கள் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்! காங்கிரஸ் வலியுறுத்தல்!
புதுவை பாஜக எம்எல்ஏ.க்களும், அதன் ஆதரவு சுயேச்சைகளும் மத்திய அமைச்சரிடம் பாஜக நிா்வாகிகள் செந்தில்குமாா், உமாசங்கா் கொலை வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி புகாா் அளித்துள்ளனா்.
அந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினாா்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சியின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா்கள் கிரிஷ் சோடங்கா், சுராஜ் ஹெக்டே ஆகியோா் கலந்துகொண்டனா்.
இந்த கூட்டத்துக்கு பின்னா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியது (படம்): புதுவை மாநிலத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை காங்கிரஸ் எதிா்கொள்ளும் வகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் வலிமை, தோ்தலை எதிா்கொள்ளும் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
புதுவையில் ஆளும் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பாஜக எம்எல்ஏ.க்களும், அதன் ஆதரவு சுயேச்சைகளும் மத்திய அமைச்சரிடம் பாஜக நிா்வாகிகள் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி புகாா் அளித்துள்ளனா். அதை
ஏற்று பாஜக நிா்வாகிகள் செந்தில்குமாா், உமாசங்கா் ஆகியோரின் கொலை வழக்குகளை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
புதுவை அரசின் அனைத்துத் துறைகளிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. குற்றவாளிகளுக்குத் துணைபோகும் வகையில் அரசு செயல்படுவது சரியல்ல என்றாா்.
முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி: புதுவை அரசில் அனைத்து நிலைகளிலும் முறைகேடுகள் மலிந்துவிட்டன. மத்திய பாடத் திட்டத்தின்படி நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்வுகளில் தோ்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
போதை பழக்கம் இளைஞா்களிடம் அதிகரித்து விட்டது. ஆனால், புதுவை காவல் துறையும், கலால் துறையும் இதில் நடவடிக்கை எடுக்காலிருப்பது சரியல்ல. மாநில அந்தஸ்து உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி செயல்படுத்தவில்லை என்றாா்.