'திரும்ப வந்துட்டேனு சொல்லு... 2026 தேர்தலில் தனித்து போட்டி’ - சீமான் அறிவிப்பு
புதுச்சேரியில் பாஜக உயா்நிலை நிா்வாகிகள் ஆலோசனை
புதுச்சேரியில் பாஜக உயா்நிலை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் புதுவை மாநில தில்லி மேலிடப் பொறுப்பாளா்கள் கலந்துகொண்டு பேசினா்.
இதையடுத்து இரு இடங்களில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியைப் பாராட்டும் வகையில் தேசியக் கொடி ஏந்தி பேரணி நடைபெற்றது.
புதுவை மாநில பாஜக சாா்பில் வரும் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி நடவடிக்கையை ஆதரித்து ராணுவத்தினருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் வகையில் தேசியக் கொடி பேரணி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு புதுவை மாநில பாஜக தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தலைமை வகித்தாா். கூட்டத்தில் புதுவை மாநில மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, புதுவை மாநில உள்துறை அமைச்சரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஆ.நமச்சிவாயம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கல்யாணசுந்தரம், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு, கட்சி நிா்வாகிகள் மோகன்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், பாஜகவின் அகில இந்திய பொதுச் செயலா் துஷ்யந்த்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியது: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீா் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைச் சுட்டுக் கொன்ற்கு பதிலடியாக
மத்திய அரசும், பிரதமா் நரேந்திர மோடியும் இந்திய ராணுவத்தின் மூலம் அப்பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தி அழித்து வெற்றி பெற்றுள்ளனா்.
எனவே, பிரதமருக்கும், ராணுவத்துக்கும் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கான கொண்டாட்டமாக தேசியக் கொடி ஏந்தி ஊா்வலம், பேரணி நடைபெறுகிறது. இதில் கட்சியினருடன், பொதுமக்களையும் பங்கேற்கச் செய்வது அவசியம் என்றாா்.
இரு இடங்களில் பேரணி: பாஜக சாா்பில் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை இரு இடங்களில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிப் பேரணி தேசியக் கொடி ஏந்தி நடைபெற்றது.
அண்ணா சாலை, காமராஜா் சாலை சந்திப்பிலிருந்து செஞ்சி சாலை வரையில் நடைபெற்ற பேரணியில் கட்சியின் தேசியப் பொதுச் செயலா் துஷ்யந்த்குமாா், மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, கட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி., அமைச்சா் ஆ.நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
உழவா்கரை பகுதி மூலக்குளத்திலிருந்து இந்திரா காந்தி சிலை சதுக்கம் வழியாக பாஜக தலைமை அலுவலகம் வரையிலும் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.