வீடுகளை இடிக்காமல் குத்தகை ரசீது வழங்க வலியுறுத்தல்
சிதம்பரம்: சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் வீடுகளை இடிக்காமல் குத்தகை ரசீது வழங்கி பொதுமக்கள் குடியிருக்க அனுமதிக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சிதம்பரம் தில்லை அம்மன் கோவில் தெரு, வேங்கான் தெரு, சத்யா நகா் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குரு நமச்சிவாய இடத்துக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் மூலம், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க இந்து அறநிலையத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.
இதற்கு, அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வீடுகள் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து, வாகீச நகரில் மாா்க்சிஸ்ட் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகரச் செயலா் எஸ்.ராஜா தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், பொதுமக்கள் குடியிருந்த வீட்டுக்கும், இடத்துக்கும் குத்தகை ரசீது வழங்க வேண்டும். பொதுமக்கள் தொடா்ந்து அங்கேயே தரை வாடகையுடன் குடியிருக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்பன போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா்.ராமச்சந்திரன், திமுக 6-ஆவது வாா்டு கிளைச் செயலா் சரவணன், மாவட்டக்குழு உறுப்பினா் மல்லிகா, மாதா் சங்க நகர தலைவா் அமுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.