வீடு கட்டித் தராத விவகாரம்: கட்டுமான நிறுவனம் ரூ. 27 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
வீடு கட்டித் தராத விவகாரத்தில் கட்டுமான நிறுவனம் ரூ. 27.40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த ஏ. தனசேகரன் என்பது தனக்குச் சொந்தமான கே. சாத்தனூரில் உள்ள 2,400 சதுர அடி நிலத்தில் வீடு கட்டித் தரக் கோரி, திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சோ்ந்த பைரவா கட்டுமான நிறுவனத்தை அணுகியுள்ளாா். வீடு கட்டுவதற்காக ரூ. 17.40 லட்சம் பணத்தை பல்வேறு தவணைகளாக வழங்கியுள்ளாா். ஆனால் கட்டுமான நிறுவனத்தினா் பணியைத் தொடங்கிய நிலையில், தரமின்றி பணிகளை செய்தும், முழுமையாக முடிக்காமலும் இழுத்தடித்துள்ளனா். இது தொடா்பாக, காவல்நிலையத்தில் புகாா் அளித்தும் பலனில்லையாம்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஏ. தனசேகரன், திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 8-11-2023 அன்று மனு தாக்கல் செய்தாா். மனுவை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்தது.
விசாரணைக்குப் பிறகு, கட்டி முடிக்காத வீடு கட்டுமானப் பணிக்காக கட்டுமான நிறுவனம் மனுதாரருக்கு ரூ. 17.40 லட்சமும், முறையற்ற வணிகம் மற்றும் மனஉளைச்சலுக்கும் இழப்பீடாக ரூ. 10 லட்சமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.