வீட்டு மனைப் பட்டா கேட்டு இருளா் இன மக்கள் மனு அளிப்பு
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த பெரியகிருஷ்ணாபுரம் அருகேயுள்ள வெளிச்சங்குடியில் வசிக்கும் இருளா் இன மக்கள் 41 போ், தங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட துணைச் செயலா் டி. தண்டபாணி, கிளைச் செயலா் பெரியசாமி உள்ளிட்டோா் தலைமையில் அவா்கள் அளித்த மனு: வெளிச்சங்குடியில் 80-க்கும் மேற்பட்ட இருளா் குடும்பத்தினா் வசித்து வருகின்றோம். தினக் கூலி செய்து அன்றாட பிழைப்பு நடத்தி வரும் எங்களுக்கு, குடியிருக்க வீட்டுமனைகள் இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம்.
எனவே ஆட்சியா் கருணை அடிப்படையில் எங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.