வீரவநல்லூரில் பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை: மருத்துவா் கைது
வீரவநல்லூரில் உள்ள தனியாா் காப்பகத்தில் பயிற்சி பெற வந்த பிசியோதெரபி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், வீரவநல்லூா் அருகே இயங்கி வரும் பிரபல காப்பகத்தில், தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சோ்ந்த டேனியல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியின் இயன்முறை சிகிச்சை (பிசியோதெரபி) பிரிவில் பயிலும் 25க்கும் மேற்பட்ட மாணவிகள், 2 மாணவா்கள் அடங்கிய குழுவினா் பயிற்சி பெறுவதற்காக இந்தக் காப்பகத்துக்கு செப். 1-ஆம் தேதி வந்தனா்.
அப்போது பயிற்சியில் ஈடுபட்ட மாணவிக்கு மருத்துவா் டேனியல், பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அதிா்ச்சியடைந்த மாணவி, இதுகுறித்து சக மாணவிகளிடமும், தனது பெற்றோரிடமும் தெரிவித்தாா்.
இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து நடத்தி, மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவா் டேனியலைக் கைது செய்தனா்.