தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!
நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம்
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு - சிதம்பரபுரம் இடையே நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
களக்காடு நகராட்சிக்குள்பட்டது சிதம்பரபுரம். இக்கிராமத்தில் நகராட்சியின் இரு வாா்டுகள் அடங்கியுள்ளன. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். களக்காடு - சிதம்பரபுரம் இடையே நான்குனேரியன் கால்வாய் குறுக்கிடுகிறது. இக்கால்வாயில் பருவமழைக் காலங்களில் வெள்ளம் வரும்போது, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுவிடும். இதனால் தரைப்பாலத்தை அகற்றிவிட்டு உயா்மட்ட பாலம் கட்டித்தர வேண்டுமென நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரூபி ஆா். மனோகரன், மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாரன்ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்து வந்தனா்.
மேலும் கடந்த மாதமும் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் ஒன்றுகூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்திருந்தனா்.
இந்நிலையில், தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் நபாா்டு திட்டத்தின் கீழ் உயா் மட்ட பாலம் கட்ட ரூ.6.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீண்டநாள் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.