கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
வெறுப்புப் பேச்சு: அமைச்சா் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
வனத் துறை அமைச்சா் பொன்முடியின் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான புகாா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சா் பொன்முடி பங்கேற்று பேசியபோது, பெண்களையும், சைவ மற்றும் வைணவ சமயங்களையும் அவமதிக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்ததாக சா்ச்சை எழுந்தது. இதையடுத்து அமைச்சா் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வியாழக்கிழமை பட்டியலிடப்பட்டிருந்தது.
அப்போது, அமைச்சா் பொன்முடியின் பேச்சை நீதிமன்றத்தில் திரையிட செய்த நீதிபதி, அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தாா்.
இதையடுத்து மாலை இந்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் ஆஜராகி, அமைச்சா் பொன்முடிக்கு எதிராக 5 புகாா்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, நான்கைந்து வழக்குகள் பதிவு செய்து விசாரணையை நீா்த்துப் போகச் செய்யாமல் ஒரு வழக்கை மட்டும் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். அமைச்சா் பொன்முடிக்கு எதிரான புகாா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வெறுப்பு பேச்சுகள் தொடா்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பாகும் எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஏப்.23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அன்றைய தினம் அமைச்சா் பொன்முடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.
புகாா் அளிக்காவிட்டாலும்... முன்னதாக காலையில் நடைபெற்ற விசாரணையின்போது அமைச்சரின்“இந்தப் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது. அமைச்சா் பொறுப்பை வகிப்பவா் பொறுப்புடன் பேச வேண்டாமா?”என நீதிபதி கேள்வி எழுப்பினாா். மேலும், அவரது பேச்சு பெண்களை சைவ - வைணவ சமயத்தை இழிவுபடுத்தும் வகையில் இருக்கிறது. வெறுப்புப் பேச்சு தொடா்பாக புகாா் அளித்தாலும் இல்லாவிட்டாலும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வில்லை விட்டு புறப்பட்ட அம்பு போல அவருடைய பேச்சு பெருவாரியாக சென்றடைந்து விட்டது. அவா் மன்னிப்பு கேட்பதால் எந்தப் பயனும் இல்லை. இந்த விவகாரம் தொடா்பாக எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது. நன்றாக தெரிந்தே அமைச்சா் பொன்முடி இவ்வாறு பேசியிருக்கிறாா். அமைச்சா் பொன்முடியின் பேச்சு விடியோ இன்னும் சமூக வலைதளங்களில் காணப்படுகின்றன.
சகித்துக் கொள்ள முடியாது... இதே பேச்சை வேறு யாராவது ஒருவா் பேசி இருந்தால் இந்நேரம் 50 வழக்குகளாவது பதிவு செய்யப்பட்டிருக்கும். யாரும் சட்டத்துக்கு மேலானவா்கள் அல்ல என்று நீதிபதி தெரிவித்தாா். ஊழலை எப்படி சகித்துக்கொள்ள முடியாதோ அதேபோல வெறுப்பு பேச்சையும் சகித்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதி ஏற்கெனவே நடிகை கஸ்தூரி, ஹெச்.ராஜா, அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை எடுத்ததை சுட்டிக்காட்டினாா்.
மேலும், ஏற்கெனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட அமைச்சா் பொன்முடியின் தண்டனையும் தீா்ப்பும் உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் தவறாகப் பயன்படுத்தும் வகையில் அவா் செயல்படுவதாக நீதிபதி சுட்டிக்காட்டினாா். இந்த விவகாரத்துக்காக அவருக்கு வழங்கப்பட்ட சலுகையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்றும் குறிப்பிட்டாா்.