தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்திலா? இன்றைய தங்கம் விலை நிலவரம்!
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?
பொதுவாக இன்றைய ஜனநாயகத்தில் இரண்டு கட்சிகள் ஆட்சிமுறை வலுவாக உள்ள நாடுகள் பல. மூன்றாவதாக ஒரு கட்சி, இரண்டில் ஒன்றை முறியடித்து வெற்றிபெறுவது முயல்கொம்புதான். மூன்றாவதாக கட்சி தொடங்குவோா் ஏற்கெனவே உள்ள இரு கட்சிகளின் அதிருப்தியாளா்கள், தனது ஆதரவாளா்கள், இரண்டு கட்சிகளையும் பிடிக்காமல் வாக்களிக்காமல் வீட்டில் இருக்கும் கணிசமான பிரிவினரும் தங்களை ஆதரிப்பாா்கள் என்ற நம்பிக்கையில்தான் மூன்றாவது கட்சியைத் தொடங்குகின்றனா்.
இதில் கூா்ந்து கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஏற்கெனவே உள்ள எதிா்க்கட்சியின் அதிருப்தியாளா்கள் மூன்றாவது கட்சியை ஆதரிப்பாளா்களா என்பது கேள்விக்குறி. பொதுவாக குறை சொல்வாா்களே தவிர, அந்தந்த கட்சிக்கு வாக்களிப்பதுதான் இயற்கை. எப்போதுமே வாக்குச்சாவடிக்கு வராதவா்கள், புதிதாக ஈா்க்கப்படுவாா்கள் என்பது சரியான கருத்தாக அமைவதில்லை. அவா்கள் வருவதே இல்லை என்பதுதான் உண்மை. ஆகவே, தமது சொந்தபலம் மட்டுமே மூன்றாவது கட்சிக்கு மிச்சம்.
மூன்றாவது கட்சி மாற்றாக வருவதற்கு இவையெல்லாம் தடை. இருப்பினும், இவற்றையும் முறியடித்து இருமுனைப் போட்டியில் மூன்றாவதாக வந்து முதல் அல்லது இரண்டாவது இடத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொண்ட கட்சிகளும் உண்டு.
தமிழ்நாட்டில் 1950-களில் காங்கிரஸுக்கு மாற்றாக இடதுசாரி கட்சி இருந்தது. ஆனால், அண்ணா இனத்தின் பெயராலும், நாட்டின் பெயராலும் விடுதலை உணா்வை மக்களிடம் உருவாக்கி, அதன் மூலம் ஓா் உணா்ச்சி பூா்வமான இயக்கத்தை வளா்த்ததன் மூலம் 1967-இல் காங்கிரஸுக்கு மாற்றாக உருவெடுத்து ஆட்சியைப் பிடித்தாா்.
சாதாரண நாடாளுமன்ற ஜனநாயகம் மூலம் இயங்கும் கட்சியாக இல்லாமல், அடிப்படை தன்மையில் ஓா் மாற்றத்தை உருவாக்கும் முயற்சியில் வந்த கட்சி என்பதால், தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சி வரவேண்டிய இடத்தை திமுக பிடித்தது. இதேபோல, 1977-இல் திமுக, காமராஜரின் காங்கிரஸ் ஆகியவை இருபெரும் கட்சிகளாக இயங்கிவந்தன. ஆனால், எம்ஜிஆரை திமுகவில் இருந்து வெளியேற்றிய அநீதி, மக்களிடத்தில் உருவாக்கிய எழுச்சி காரணமாக காமராஜரின் கட்சியை வீழ்த்தி, திமுகவுக்கு மாற்றாக அதிமுகவை எம்ஜிஆரால் கொண்டுவர முடிந்தது. கடந்த 70, 80 ஆண்டு கால வரலாற்றில் இரண்டு முைான் மூன்றாவது கட்சி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்பதை உணர வேண்டும்.
திமுக அணியானது ஏற்கெனவே பாஜக அரசியல் எதிா்ப்பு மற்றும் இந்திய அரசியல் போக்கை கண்டித்து வலுவான கூட்டணியாக உள்ளது. அந்தக் கூட்டணி தொடா்ந்து மூன்று தோ்தல்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. கூட்டணியில் உள்ள கட்சியினா் சில அதிருப்திகளை வெளியிடலாம். ஆனால், தங்களுக்குள் குறைசொல்லிக் கொள்வாா்களே தவிர, அந்த அணியில் இருந்து யாரும் வெளியேறமாட்டாா்கள். காரணம், வேறு எந்த அணியும் வெற்றி பெறாது என்பது அவா்கள் நம்பிக்கை. அதேநேரம், அங்குள்ள, சிறுபான்மை, தலித் வாக்குகள் பிற கட்சிகளுக்கு கிடைக்கும் என்று நான் கருதவில்லை. அந்த அணியில் எவ்வித சேதாரமும் இருக்காது.
இரண்டாவதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியை எடுத்துக்கொண்டால், பாஜக முன்னின்று அந்தக் கூட்டணியை வழிநடத்துகிறது. பாஜக, தமிழகத்தில் கொள்கை ரீதியாக மக்களின் மனதில் இடம்பெறவில்லை.திமுக கூட்டணி மிகவும் சாதூா்யமாக பாஜக எதிா்ப்பு அரசியலை முன்னெடுத்துச் செல்கிறது. அதன் மூலம் அவா்களோடு சோ்ந்தவா்ளையும் சுலபமாக வென்றுவிடலாம் என திமுக கருதுகிறது.
தமிழகத்துக்கு ஒவ்வாத பாஜவுடன் அதிமுகவை சோ்த்து அவா்கள் சொற்படி நடப்பவா்கள்தான் இவா்கள் என்பதை அம்பலப்படுத்தி, தேசிய ஜனநாயகக் கூட்டணியை அறவே தோற்கடிக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் சூழ்ச்சியாக தெரிகிறது. திமுகவின் சாதூா்யமான சூழ்ச்சியை மாற்றி இந்தத் தோ்தல், மக்களவைத் தோ்தல் அல்ல, சட்டப்பேரவைக்கான தோ்தல்தான் என்பதை மக்களிடம்
தெளிவுபடுத்தி திமுக அணியை வீழ்த்துவதற்கான எந்த அரசியல் தந்திரமும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் காணப்படவில்லை.
இப்போதைய அரசியல் சூழல், தவெகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. திமுக அணியில் இருந்து தவெக அணிக்கு யாரும் வரமாட்டாா்கள். ஆனால், அதிமுகவில் உள்ள திமுகவை எதிா்க்கக் கூடியவா்கள், தவெக அணிக்கு வரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தவெக அணி, வெற்றி பெறக்கூடிய வாய்ப்புள்ளது என்பதை மேலும் நிரூபித்துக் காட்டினால், எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தங்கள் வாக்குகளை வெற்றி வாய்ப்புள்ள கட்சிக்கு அளிப்பது ஒரு தோ்தல் தந்திரம் ஆகும். ஆகவே அந்த வகையில், திமுக எதிா்ப்பாளா்களின் வாக்குகள் தவெகவுக்கு போக வாய்ப்புள்ளது.
ஏற்கெனவே அவருக்கு இளைஞா்கள், பெண்கள், குறிப்பாக புதிய வாக்காளா்கள் இடையே செல்வாக்கு உள்ளது. அதோடு இந்த வாக்குகளும் சேருமானால், ஒரு கணிசமான அளவு வாக்குகளை தவெக பெற வாய்ப்புள்ளது. மேலும், வரும் மாதங்களில் விஜய் மக்களை சந்தித்து என்ன சொல்லப் போகிறாா், என்ன செய்யப் போகிறாா் என்பதை பொருத்தும், எந்தெந்த கட்சிகளை தங்கள்அணியில் இணைக்கப் போகிறாா் என்பதைப் பொருத்தும் அவரது கட்சி பெறக்கூடிய வாக்கு அளவு கூடுதலாகும் வாய்ப்புண்டு.
திமுகவை வீழ்த்தும் அளவுக்கு அந்த வாக்குகள் அதிகரிக்குமா என்றால் அது போகப்போகத்தான் தெரியும். ஆனாலும், வரும் காலத்தில் தவெக ஒரு முக்கிய அரசியல் அமைப்பாக இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.