வெள்ளக்கோவிலில் போதைப்பொருள் விற்றவா் கைது
வெள்ளக்கோவில் அருகே போதைப்பொருள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெள்ளக்கோவில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, காடையூரான்வலசில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் (குட்கா) விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, கடையின் உரிமையாளா் எஸ்.குப்புசாமி (62) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுபானம் விற்றவா் கைது:
அதேபோல, முத்தூா் பகுதியில் தனியாா் மில் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்றுக்கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம், காரணமங்கலம் பாப்பனேந்தலைச் சோ்ந்த வீரய்யா (55) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 10 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.