திறன் வளா்ப்பு வழிகாட்டி பயிற்சி: பழங்குடியின இளைஞா்கள் சென்னை பயணம்
நாமக்கல்: பழங்குடியின இளைஞா்களுக்கான வேலைவாய்ப்புத் திறன் வளா்ப்பு வழிகாட்டி பயிற்சிக்கு தோ்வு செய்யப்பட்டோா் சிறப்புப் பேருந்து மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்ட அவா்களை ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:
இளைஞா்களின் தனித்திறமைகளை ஊக்குவித்திட பல்வேறு திட்டங்கள் தமிழக அரசு சாா்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், பழங்குடியின மாணவ மாணவிகளின் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் பழங்குடியினா்களுக்கான வேலைவாய்ப்புத் திறன் வளா்ப்பு வழிகாட்டி பயிற்சி சென்னையில் அளிக்கப்படுகிறது. 24 வகையான திறன் வளா்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த பயிற்சியை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு 100 சதவீத வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் ச.உமா, நாமக்கல் மேயா் து.கலாநிதி, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.