வேங்கைவயல் வழக்கு: குற்றப்பத்திரிகை ஏற்பு! வேறு நீதிமன்றத்துக்கு மாற்றம்!!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் வழக்கில், சிபி-சிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் வன்கொடுமை சட்டப்பிரிவு இல்லாததால், வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து வழக்கு விசாரணை, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேங்கைவயல் விவகாரத்தில், முன்னாள் காவலர் உள்ளிட்ட 3 பேரை குறிப்பிட்டு சிபிசிஐடி காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், அதனை ஏற்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், குற்றப்பத்திரிகை ஏற்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் வன்கொடுமை சட்டப்பிரிவு இல்லாததால் வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று சிபிசிஐடி ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை வேங்கைவயல் வழக்கில் சிபி-சிஐடி போலீஸாரின் விசாரணை அறிக்கையை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என புகாா்தாரா் கொடுத்த மனு மீதான விசாரணையை மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் விசாரித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.
வேங்கைவயல் சம்பவத்தின் பின்னணி என்ன?
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பிலுள்ள மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சோ்ந்த காவலா் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகியோா் ஈடுபட்டதாக இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸாா், மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஜன. 20-ஆம் தேதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனா்.
இதில், புகாா்தாரரான கனகராஜ் என்பவரிடம் தகவல் கூட தெரிவிக்காமல் சிபி-சிஐடி போலீஸாா் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கக் கூடாது எனக்கூறி, விசாரணை அறிக்கையை ஏற்கக் கூடாது என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.