வேங்கைவயல் விவகாரத்தில் திடீர் திருப்பம்: குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேர் யார்?
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில், குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில், சிபிசிஐடி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கும் நிலையில், இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.
வேங்கைவயல் பகுதியில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூன்று பேரில், முரளிராஜா என்பவர் ஆயுதப்படைக் காவலராக பணியாற்றியவர்.
இவரிடம் ஏற்கனவே சிபிசிஐடி விசாரணை நடத்தி வந்தநிலையில் குற்றப்பத்திரிகையில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
அதாவது, வேங்கைவயல், இறையூர் கிராமங்களை உள்ளடக்கிய முடுக்காடு பஞ்சாயத்துத் தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர்த் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்துள்ளார். இதற்குக் காரணமாக இருந்த பத்மாவின் கணவர் முத்தையாவை பழிவாங்குவதற்காக, குடிநீரில் துர்நாற்றம் வருவதாக முரளி ராஜா பொய்யான தகவலை பரப்பியிருக்கிறார்.
இதனை உண்மையாக்கும் வகையில், குடிநீர்த் தொட்டி மீது ஏறி முத்துகிருஷ்ணனும், சுதர்சனும் மனிதக் கழிவை குடிநீரில் கலந்துள்ளனர் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வேங்கைவயல் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அதில், மூன்று பேர் மீது குற்றம்சாட்டி, சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.
வேங்கைவயல் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம் கோரி சிபி சிஐடி போலீஸாா் மாவட்ட எஸ்டி எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனு அளித்திருந்ததாக தகவல் வந்தநிலையில், இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்து 750 நாள்களுக்குப் பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவத்தின் பின்னணி?
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் உள்ள குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 டிசம்பா் 26ஆம் தேதி தெரியவந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகிறார்கள். ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் முனியப்பராஜ் ஆஜராகி, ‘இதுவரை 389 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குரல் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. சந்தேகத்துக்குரிய 3 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.