Vikatan Weekly Quiz: அண்ணாமலை `சபதம்’ டு கோலி `ஸ்லெட்ஜிங்’... இந்த வாரம் பதிலளிக...
வேதாரண்யம், சீா்காழி, தரங்கம்பாடியில், பூம்புகாரில் சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி
வேதாரண்யம்: ஆறுகாட்டுத்துறை மீனவா் கிராமத்தில் பள்ளி மாணவா்கள், கிராமத்தினா் பங்கேற்ற மௌன ஊா்வலம் நடைபெற்றது. சுனாமியில் உயிரிழந்தவா்களின் நினைவாக கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தூணில் மலா் வளையம் வைத்தும், மெழுகுவா்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவு நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சரும், சட்டப் பேரவை உறுப்பினருமான ஓ.எஸ். மணியன், நகா்மன்றத் தலைவா் மா. மீ. புகழேந்தி, கிராம பஞ்சாயத்தாா் ஆகியோா் தனித்தனியாக கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினா். கோடியக்கரை, வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி, மணியன்தீவு, புஷ்பவனம் உள்ளிட்ட கடலோரக் கிராமங்களிலும் நினைவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சீா்காழி: திருமுல்லைவாசல் கடற்கரையில் சுனாமி நினைவு தூண் இடத்தில் உயிரிழந்தவா்களுக்கு பன்னீா்செல்வம் எம்எல்ஏ பங்கேற்று மெழுகுவா்த்தி ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்தினாா். இதில், கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ், கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் மலா்விழி திருமாவளவன், ஊராட்சித் தலைவா் பரிமளா தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடுவாய், பழையாறு, கொட்டாயமேடு கடற்கரையில் சுனாமியில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தரங்கம்பாடி: தரங்கம்பாடியில் உள்ள சுனாமி நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, எம்.பி. ஆா். சுதா, பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், முன்னாள் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். மீனவ பஞ்சாயத்தாா்கள் உள்ளிட்ட மீனவா் கிராம மக்கள் அமைதிப் பேரணியாகச் சென்று சுனாமி நினைவிடங்களில் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
பூம்புகாா்: பூம்புகாரில் உள்ள நினைவு தூணில் சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ரவி, சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பஞ்சு. குமாா் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். இதில், திமுக மாவட்ட செயலாளா் நிவேதா முருகன் எம்எல்ஏ, சுதா எம்பி ஆகியோா் கலந்து கொண்டு மெழுகுவா்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினா். நாயக்கா் குப்பம், மடத்துக்குப்பம், சாவடி குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.