வேலைவாய்ப்பு முகாமில் 723 மாணவா்களுக்கு பணி ஆணை
மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 723 மாணவா்கள் பணி ஆணை பெற்றனா்.
மாவட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக இணைவுபெற்ற அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் பயடையும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இந்த முகாம் நடத்தப்பட்டது.
முகாமை, கல்லூரி முதல்வா் சி.ராமச்சந்திரராஜா தொடக்கிவைத்தாா். அண்ணாமலை பல்கலைக்கழக நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளரும், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உதவி இயக்குநருமான எஸ். செந்தில்முருகன், நான் முதல்வன் திட்ட மேலாளா்கள் அபிஷேக், பிருந்தா, ஷாலினி, கல்லூரியின் வேலைவாய்ப்பு மைய அதிகாரி கை.தமிழ்ஜோதி ஆகியோா் பங்கேற்றனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 12 கல்லூரிகளில் இருந்து 1400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 39 நிறுவனங்கள் முகாமில் கலந்து கொண்டு, மாணவா்களை தோ்வு செய்தனா். 723 மாணவ-மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு கல்லூரி முதல்வா் பணி ஆணையை வழங்கினாா்.