வக்ஃப் மசோதாவை கண்டித்து ஏப்.9-இல் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்
L2 Empuraan: சர்ச்சைகளை தொடர்ந்து ப்ரித்விராஜுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ்!
L2 Empuraan சர்ச்சை:
ப்ரித்விராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் `எல் 2: எம்புரான்' திரைப்படம் வெளியாகியிருந்தது. மோகன் லால் நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு பல்வேறு சர்ச்சைகளும் எழுந்திருந்தது.
படத்தில் குஜாராத் கலவரத்தை நினைவுப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், இந்துத்துவ கொள்கைகளையும், தலைவர்களையும் அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனை தொடர்ந்து முல்லை பெரியாறு அணை தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் கூறி தமிழகத்திலிருந்தும் பலர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.
இப்படியான சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து நடிகர் மோகன்லால் மன்னிப்புக் கோரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதுபோக, சில காட்சிகளை நீக்குவதாகவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
வருமான வரித்துறை நோட்டீஸ்
அதனை தொடர்ந்து படத்தில் 24 கட்களை மேற்கொண்டு புதிய பதிப்பை மறுவெளியீடு செய்தனர். இதில் பல்வேறு காட்சிகளை கட் செய்ததோடு படத்தின் முக்கிய வில்லனின் பெயரையும் மாற்றியிருக்கிறார்கள். இப்படியான விஷயங்களுக்குப் பிறகு இப்படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கதுறையினர் நேற்றைய தினம் சோதனை நடத்தியிருந்தனர்.
இதையடுத்து தற்போது நடிகர் ப்ரித்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
இவருடைய சமீபத்திய படங்களான `கடுவா' ,`ஜன கன மன' , `கோல்டு' போன்ற திரைப்படங்களுக்குப் நடிகராக இல்லாமல் இணை தயாரிப்பாளராக 40 கோடி ஊதியம் பெற்றதை கண்டறிந்து அது தொடர்பான ஊதிய விவரங்களை வருமான வரித்துறையினர் கேட்டிருக்கிறார்கள்.
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு வருமான வரித்துறையினர் நடிகர் ப்ரித்விராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பது மாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.