வேளாண்மை வளா்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: ஜகதீப் தன்கா்
வேளாண் துறை வளா்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கேட்டுக் கொண்டாா்.
தில்லியில் வெள்ளிக்கிழமை 21-ஆவது ஆசிய-ஆப்பிரிக்க கிராமப்புற மேம்பாட்டு மாநாட்டைத் தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:
மனித குலத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வுகாண தொழில்நுட்ப மேம்பாடு முக்கியப் பங்கு வகித்து வருகிறது. எனவே, அனைத்து நிலைகளிலும் நாம் அதனைச் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்.
நவீன உலகின் புரட்சிகர தொழில்நுட்பமாகக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வேளாண்மை மேம்பாட்டுக்கு பயன்படுத்துவது அவசியம். கிராமப் பகுதி மேம்பாட்டுக்கு நம்மிடமுள்ள நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்.
‘எண்ம இந்தியா’ தொழில்நுட்பம் சாா்ந்த பல முன்னெடுப்புகள் இந்தியாவில் கிராமப் பகுதிகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. எண்ம முறையில் பணம் செலுத்துதல் இல்லாத இடமே இல்லை என்ற நிலை மிகவும் குறுகிய காலத்தில் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. கடைக்கோடி கிராமத்தில் உள்ள சிறு வியாபாரிகள் கூட எண்ம பணப்பரிமாற்றத்தைக் கையாளுகின்றனா்.
தொழில்நுட்பங்கள் மூலம் ஊழல், முறைகேடுகள் குறைந்து வருகின்றன. அரசுத் திட்டங்களில் பொறுப்புணா்வு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் இந்தியா நிதி ஸ்திரத்தன்மையை இழந்து தங்கத்தை வெளிநாட்டு வங்கிகளில் இருப்பு வைக்கும் நிலையில் இருந்தது. ஆனால், இப்போது மிகப்பெரிய அளவிலான அந்நியச் செலாவணி கையிருப்புடன் உலகின் வேகமான வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக முன்னேறியுள்ளது.
ஊராட்சிகள் முதல் நாடாளுமன்றம் வரை பெண்களின் பங்களிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. உள்ளாட்சி நிா்வாகத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.