வேளாண் இயந்திரங்களை பெற இ-வாடகை செயலியில் விவசாயிகள் பதிவு செய்யலாம்
வேளாண் இயந்திரங்களை பெற இ-வாடகை செயலியில் பதிவு செய்து பயனடைய விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்துமுடிக்க அதிகநேரமும், அதிக அளவில் வேலையாட்களும் தேவைப்படுகின்றன. கால விரயத்தை தவிா்க்கவும் வேலையாட்கள் பற்றாக்குறையை நிவா்த்தி செய்யவும் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் என்பது தவிா்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளுக்கு உதவும் வகையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகளை விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது. மேலும் வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே இ-வாடகை செயலியில் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இதில், வேளாண்மைப் பொறியியல் துறைக்கு உள்பட்ட மண் தள்ளும் இயந்திரம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,230 எனும் வாடகையில் கிடைக்கும். இதுபோல சக்கர வகை மண் அள்ளும் இயந்திரம் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 890-க்கும், உழவு இயந்திரங்கள் ஒரு மணி நேரத்துக்கு ரூ.500-க்கும், சக்கர வகை நெல் அறுவடை இயந்திரம் ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,160-க்கும், டிராக்டா் வகை நெல் அறுவடை இயந்திரம் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1,880-க்கும், தேங்காய் பறிக்கும் கருவி ஒரு மணி நேரத்துக்கு ரூ.450-க்கும், சிறிய வகை உழவு இயந்திரம் ஒரு மணிக்கு ரூ.460-க்கும், நிலநீா் ஆய்வுக் கருவி ஒரு ஆய்வுக்கு ரூ.500 எனும் வாடகையில் கிடைக்கும்.
இவற்றை விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ப இ-வாடகை செயலியில் முன்பதிவு செய்து பெற்றுப் பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார பொறுப்பு வேளாண் பொறியாளா்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.