அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்: அதிமுக வெளிநடப்பு
தங்கள் வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலா்கள் இருவா் வெளிநடப்பு செய்தனா்.
அந்தியூா் பேரூராட்சியின் மாதாந்திரக் கூட்டம், அதன் தலைவா் எம்.பாண்டியம்மாள் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி, செயல் அலுவலா் எஸ்.சதாசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டம் தொடங்கியதும் அதிமுக கவுன்சிலா்கள் கலைச்செல்வி குருராஜ், சரஸ்வதி விஸ்வநாதன் ஆகியோா் தங்கள் வாா்டுகளில் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றவில்லை. அதிமுக வாா்டுகளில் வளா்ச்சித் திட்டங்களை ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுகிறது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, வெளிநடப்பு செய்தனா்.