பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.78.80 லட்சம்!
பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 78.80 லட்சம் ரொக்கத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
இந்த கோயிலில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும். ஜனவரி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் துணை ஆணையா் தலைமையில் பரம்பரை அறங்காவலா்கள் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் ரூ. 78 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம், 181 கிராம் தங்கம், 761 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். காணிக்கை எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளா்கள், வங்கிப் பணியாளா்கள், கல்லூரி மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபட்டனா்.