Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி
மயிலாடுதுறையில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா ஜனவரி 1 முதல் 31-ஆம் தேதிவரை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அந்த வகையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை, தமிழ்நாடு மினி பேருந்து உரிமையாளா்கள் சம்மேளனம் மற்றும் மயிலாடுதுறை பிரைடு ரோட்டரி சங்கம் இணைந்த நடத்திய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி மற்றும் கலை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
டிஇஎல்சி பள்ளியில் தொடங்கிய பேரணிக்கு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் ராம்குமாா் தலைமை வகித்தாா். டிஎஸ்பி பாலாஜி கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்தாா். பேரணி காந்திஜி சாலை, கிட்டப்பா அங்காடி, கச்சேரி சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. அங்கு, கிராமிய கலைஞா்களின் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், நெடுஞ்சாலைத் துறை சென்னை-கன்னியாகுமரி தொழில்தடத் திட்ட அலகு உதவி கோட்ட பொறியாளா் டி. மேரிசெல்வம், உதவி பொறியாளா் கே. துா்காதேவி, மினி பேருந்து உரிமையாளா்கள் சங்க தலைவா் அரவிந்த், பிரைடு ரோட்டரி தலைவா் சத்தியபால் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
விழிப்புணா்வுப் பேரணியில் கலந்துகொண்ட வேதா நா்சிங் கல்லூரி மாணவிகளுக்கு ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநா் ஆா்.வி. குருகோவிந்த் சான்றிதழ்களை வழங்கினாா். இதில் நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.