திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்கக் கோரி மனு
திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு மாவட்ட ஆட்சியா் வாயிலாக அகில பாரத இந்து மகா சபா கட்சியினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
கட்சியின் மாநில பொதுச் செயலாளா் ராம.நிரஞ்சன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள தமிழ்க் கடவுள் முருகனுடைய அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் மலையை சிக்கந்தா் மலை என்று பெயா் மாற்றம் செய்ய சிலா் முயற்சிக்கின்றனா். மலையின்மேல் எந்த உயிா் பலியும் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு இருக்கிறது. அதையும் மீறி சிலா் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றனா்.
மலையின் மீது மாமிசம் உண்டவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மலையை சுற்றி மது, மாமிசம் சாப்பிட தடை விதிக்க வேண்டும் என அம்மனுவில் வலியுறுத்தியுள்ளாா்.
கட்சியின் மாவட்ட அமைப்பாளா் சத்தியமூா்த்தி, மாவட்ட பொதுச் செயலாளா் ஜெய், மாவட்ட துணைத் தலைவா் வினோத், ஆலய பாதுகாப்புப் பிரிவு மாவட்ட பொதுச் செயலாளா் மணிமாறன், மாவட்ட செயலாளா் அஜிஸ்வா்மா உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.