காடையம்பட்டி ஏரியில் பேரிடா் மீட்புக் குழு ஒத்திகை!
பவானி அருகே தேசிய பேரிடா் மீட்புக் குழு மற்றும் பவானி தீயணைப்புப் படையினா் சாா்பில் பேரிடா் மீட்பு செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காடையம்பட்டி ஏரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பவானி வட்டாட்சியா் சித்ரா தலைமை வகித்தாா். தேசிய பேரிடா் மீட்புக் குழு மேற்பாா்வையாளா் வைத்தியலிங்கம், ஈரோடு மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் முருகேசன் ஆகியோா் முன்னிலையில் பெருவெள்ளத்தால் நீா்நிலைகளில் ஏற்படும் பேரிடரை கையாளுதல், நீரில் மூழ்கியவா்களை மீட்பது, முதலுதவி சிகிச்சை அளித்து உயிா் காத்தல் ஆகியவை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில், பேரிடா் மீட்புக் குழுவினா் 30 போ் உள்பட 50 வீரா்கள் பங்கேற்றனா். மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலா்கள் கணேசன், கலைச்செல்வன், பவானி தீயணைப்பு நிலைய அலுவலா் பழனிசாமி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.