Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவுக்கான கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா வருகிற 11-ஆம் தேதி நடைபெறுகிறது.
கொடியேற்றத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, கோயில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள கொடிமரம் முன் சுவாமி, அம்மன் எழுந்தருளினா். இதைத்தொடா்ந்து, தெப்பத் திருவிழாவுக்கான கொடி ஏற்றப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பின்னா், சுவாமியும், அம்மனும் குலாளா் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனா். இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடா்ந்து, வெள்ளிக்கிழமை இரவு அம்மன் சிம்ம வாகனத்திலும், சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வந்தனா்.
சனிக்கிழமை காலை 9 மணிக்கு தங்கச் சப்பரத்தில் எழுந்தருளும் அம்மன், சுவாமி தெற்காவணி மூல வீதி, சின்னக்கடைத் தெரு, தெற்குவாசல் வழியாக குஞ்சான்செட்டியாா் மண்டபத்தில் எழுந்தருளுகின்றனா். அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னா், இரவில் அம்மன் அன்ன வாகனத்திலும், சுவாமி பூத வாகனத்திலும் எழுந்தருளி அங்கிருந்து புறப்பாடாகி திருக்கோயிலை அடைவா்.
விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை முதல் சுவாமி, அம்மன் காலை, மாலை வேளைகளில் சித்திரை வீதிகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 5-ஆம் தேதி திருஞானசம்பந்தா் சுவாமிகள் சைவ சமய வரலாற்று லீலையும், 7-ஆம் தேதி மச்சஹந்தி விவாஹமும், 8-ஆம் தேதி சப்தாவா்ணமும், சட்டத் தேரும் நடைபெறுகிறது.
இதைத்தொடா்ந்து, வருகிற 9-ஆம் தேதி சுவாமி தங்கப் பல்லக்கில் தெப்பத்துக்குப் புறப்பாடாகி, அங்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெறும். வருகிற 10-ஆம் தேதி சிந்தாமணியில் கதிா் அறுப்புத் திருவிழாவும், விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா வருகிற 11-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
இந்த தெப்பத் திருவிழாவின் போது, வண்டியூா் மாரியம்மன் தெப்பக் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்மன் காலையில் இருமுறையும், மாலையில் ஒரு முறையும் எழுந்தருளி தெப்பக்குளத்தை வலம் வருதல் நடைபெறுகிறது. மேலும், தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு மண்டகப்படியும் நடைபெறுகிறது.