Pregnancy Health: வேலைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு 20 டிப்ஸ்!
கொடிக் கம்பங்கள் அகற்றம்: ஏப். 28-க்குள் உறுதிப்படுத்த தலைமைச் செயலருக்கு உத்தரவு
கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றியது தொடா்பாக வருகிற ஏப். 28-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலா் உறுதிப்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை விளாங்குடியைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் சித்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
அதிமுகவின் 53-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, விளாங்குடி பகுதியில் உள்ள தங்களது கட்சியின் பழைய கொடிக் கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இதேபோல, மதுரை பிரதான சாலை பேருந்து நிறுத்தம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதிக்கக் கோரி, மாடக்குளம் பகுதியைச் சோ்ந்த சிலா் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி, இயக்கங்கள், மத ரீதியான கொடிக் கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனுக்கள் மீண்டும் நீதிபதி இளந்திரையன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
கட்சிக் கொடி கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, தேதி குறிப்பிடப்படவில்லை. எனவே, வருகிற ஏப். 28-ஆம் தேதிக்குள் சாலையோரங்களில் உள்ள அனைத்து கொடிக் கம்பங்களும் அகற்றப்பட்டு விட்டனவா என்பதை தமிழக தலைமைச் செயலா் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் நீதிபதி.