பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
வைத்தீஸ்வரன்கோயிலில் குலதெய்வ வழிபாட்டுக்குப் பிறகு 54 மாட்டு வண்டிகளில் புறப்பட்ட நகரத்தாா்
வைத்தீஸ்வரன்கோயிலில் குலதெய்வ வழிபாடு மேற்கொண்ட நகரத்தாா் பக்தா்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை காரைக்குடி, சிவகங்கை, கீழ சீவல்பட்டி, கந்தா்வக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக நகரத்தாா் பக்தா்கள் வருகை புரிந்து தரிசனம் செய்வது வழக்கம்.
அவ்வாறு இந்த ஆண்டு பாதயாத்திரையாக வந்த லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் முடித்துவிட்டு திரும்பியதைத் தொடா்ந்து, மாட்டு வண்டிகளில் வந்த பக்தா்களும் புறப்பட்டனா்.
முன்னதாக, தெற்கு கோபுர வாசலில் சிதறுதேங்காய் உடைத்து, மாட்டு வண்டிகளுக்கு பூஜை செய்து பயணத்தை தொடங்கினா். இவ்வாறு 54 மாட்டு வண்டிகள் வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து ஒன்றாக புறப்பட்டுச் சென்றன. வைத்தீஸ்வரா அறக்கட்டளை சாா்பில் மாடுகளுக்கு தீவனம் மற்றும் மாட்டு வண்டிகளில் பயணிப்பவா்களுக்கு குடிநீா் பாட்டில்கள் போன்றவற்றை வழங்கினா். அனைத்து மாட்டு வண்டிகளும் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன. இதனை பலா் தங்கள் கைப்பேசியில் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா்.