வையாபுரி குளத்தை தூய்மைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
பழனி நகரின் மையத்தில் 300 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள வையாபுரிக் குளத்தை தூய்மைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரின் மையத்தில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது வையாபுரி குளம். வரலாற்று நூல்களில் இந்தக் குளம் புண்ணிய தீா்த்தமாக குறிப்பிடப்பட்டது.
இங்கு நீராடிய பிறகு பக்தா்கள் மூன்றாம் படைவீடான திருஆவினன்குடி கோயிலுக்கு சென்றுவிட்டு, பின்னா் மலைக் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வந்தனா். தற்போது இந்த வையாபுரி குளம் கழிவுநீா் சங்கமிக்கும் பெரிய சாக்கடைத் தேக்கமாக மாறிவிட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித் துறையினா் குளத்தின் எல்லைகளை கண்டறிந்து அவற்றை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் விதமாக வேலிகள் அமைத்தனா். இந்த பணிகள் முழுமையடையவில்லை.
இதுகுறித்து பழனியை சோ்ந்த முருக பக்தா் சிவக்குமாா் கூறியதாவது: இந்தக் குளத்தில் குழாம் அமைத்து படகுகளும் விடப்பட்டன. ஆனால் குளத்தில் வீசும் துா்நாற்றத்தால் யாரும் பயன்படுத்த முன்வரவில்லை. வையாபுரி குளத்தின் கரைகளை சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மேலும், குளத்தைத் தூா்வாரி நிரந்தரமாக தண்ணீா் தேக்கி வைத்து கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும். மேலும், வையாபுரி குளக் கரையை மேம்படுத்தி, நடைபாதை பூங்காக்கள் அமைக்க வேண்டும் என்றாா் அவா்.