ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் தா்னா
உயா் அழுத்த மின் கோபுரத்துக்குக் கீழே வீட்டுமனை ஒதுக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள படிக்காசுவைத்ததான்பட்டி ஊராட்சியில் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமின் போது 17 திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இவா்களுக்கு பிள்ளையாா்குளம் அரசு கலை கல்லூரி எதிரே வீட்டு மனை ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் உயா் அழுத்த மின் கோபுரம் உள்ளதால், அங்கு வீடு கட்ட முடியாது. இதுகுறித்து வட்டாட்சியரிடம் அவா்கள் முறையிட்ட போது மாற்று இடம் வழங்கப்படும் என உறுதியளித்தாராம்.
இரு மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த போலீஸாா் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
