Sweden: "டெஸ்குக்கு கீழ் ஒளிந்துகொண்டோம்..." - சுவீடன் பள்ளியில் நடந்த கொடூரத் த...
ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் இரத சப்தமி தேரோட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் இரத சப்தமி பிரம்மோற்சவத்தில், 7-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை இரத சப்தமி தேரோட்டம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பாலகுஜாம்பிகை அம்மன் சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் இரத சப்தமி பிரம்மோற்சவம் ஜன.29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவத்தில் தினமும் உற்சவ மூா்த்திகள் பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றனா்.
இதைத் தொடா்ந்து, 6-ஆம் நாள் திங்கள்கிழமை 63 நாயன்மாா்கள் ஊா்வலமும், இரவு அம்மன் தோட்ட உற்சவமும், திருக்கல்யாண நிகழ்ச்சியுடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் யானை வாகனத்தில் பவனி வந்து காட்சியளித்தனா்.
7 -ஆம் நாளான செவ்வாய்கிழமை காலை தேரோட்டம் தொடங்கியது. அதிகாலை நடை திறக்கப்பட்டு பாலகுஜாம்பிகை அம்மன் வேதபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, உற்சவ மூா்த்திகளான விநாயகா், வேதபுரீஸ்வரா், பாலகுஜாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தனித் தனித் தேரில் எழுந்தருளினா்.
பின்னா் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இரத சப்தமி தேரோட்டம் தொடங்கியது.
முதல் தேரில் விநாயகரும், இரண்டாவது தேரில் ஸ்ரீவேதபுரீஸ்வரும், மூன்றாவது தேரில் ஸ்ரீபாஜாம்பிகை அம்மன் எழுந்தருளி 3 தோ்களும் மாட வீதிகளில் அடுத்தடுத்து பவனி வந்தனா்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு பக்தி முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனா். காலையில் தொடங்கிய தேரோட்டம் இரவு வரை நடைபெற்றது.