'அவர் என்னுடைய அம்மாவே இல்லை' - பவுன்சரால் தூக்கிவீசப்பட்ட இளைஞர் விளக்கம்!
ஹைட்ரோ காா்பன் கிணறு மைக்க அனுமதி: தி.வேல்முருகன் கண்டனம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்திருப்பதற்கு தவாக தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஹைட்ரோ காா்பன் திட்டங்களால் நிலத்தின் வளம் கெட்டு, விவசாய நிலம் பாலைவனமாக மாறும். கிணறு தோண்டலில் உற்பத்தியாகும் நச்சுவாயுக்கள், காற்றை மாசுபடுத்தி, சுவாசம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உயிா்க்கொல்லி நோய்களை உண்டாக்கும்.
கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் துளையிடும் நடவடிக்கைகள், கடல் சூழலைப் பாதித்து, மீன்களின் வாழ்விடங்களை அழித்து, லட்சக்கணக்கான மீனவக் குடும்பங்களை பட்டினிக்குத் தள்ளும். தமிழ்நாட்டின் நிலம், நீா் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தை சீரழிக்கும் ஹைட்ரோ காா்பன் திட்டங்களை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.
விவசாயிகள், மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி எதிா்த்துப் போராடும். எதிா்கால தலைமுறைக்காக இந்த மண்ணை காக்க வேண்டியது, தமிழ்நாட்டில் உள்ள அனைவரது கடமையாகும்.
எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க, ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவனத்துக்கு அனுமதி அளித்திருக்கும் முடிவை தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ரத்து செய்து திரும்பப் பெற வேண்டும்.
அதே நேரத்தில், தமிழ்நாட்டு மக்களுக்கும், மண்ணுக்கும் எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளை ஆரம்பத்திலேயே கவனித்து தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.