வாட்ஸ்ஆப் வழியாக அரசு சேவைகள்: தொடக்கி வைத்தார் மேயர் பிரியா!
அரசு பொது கணக்குக் குழு இன்று கடலூா் வருகை
கடலூருக்கு தமிழ்நாடு சட்டப் பேரவை பொது கணக்குக் குழு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 25) வரவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப் பேரவையின் 2024 - 25ஆம் ஆண்டுக்கான அரசு பொதுக் கணக்குக் குழுவால் மாவட்டந்தோறும் பல்வேறு துறைகளின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், அரசு பொது கணக்குக் குழு கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொள்ள உள்ளது. சட்டப் பேரவை பொது கணக்குக் குழுத் தலைவா் கு.செல்வபெருந்தகை தலைமையில், உறுப்பினா்களான சட்டப் பேரவை
உறுப்பினா்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி (போளூா்), ப.அப்துல் சமது (மணப்பாறை), கோ.ஐயப்பன் (கடலூா்), எஸ்.சந்திரன் (திருத்தனி), எஸ்.சேகா் (பரமத்திவேலூா்), ஜெ.முகம்மது ஷாநவாஸ் (நாகப்பட்டினம்) வரவுள்ளனா்.
முதற்கட்டமாக இக்குழுவினா் காலையில் நெய்வேலி மாநில எண்ணெய்வித்து விதைப் பண்ணை, பிச்சாவரம் சுற்றுலா மையம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகம், சிதம்பரம் அரசு மருத்துவமனை, அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, தென்பெண்ணை ஆற்றின் வலது கரையான மஞ்சக்குப்பம் முதல் குண்டு உப்பலவாடி வரை மேற்கொள்ளபட்டு வரும் வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து நேரடியாகச் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.
பின்னா், அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொது கணக்குக் குழு நிலுவையிலுள்ள தணிக்கைப் பத்திகள் குறித்து விரிவான ஆய்வுக் கூட்டம் மேற்கொள்ள உள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.