ஹைதராபாத்: கலப்பட கள் உயிரிழப்பு 4-ஆக அதிகரிப்பு
தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் கலப்பட கள் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4-ஆக அதிகரித்தது. மேலும் 44 பேருக்கு தொடா்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடா்பாக சந்தேகத்துக்குரிய மரணம் என்ற பிரிவில் செகந்திராபாத் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பந்தப்பட்ட கள் கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டன. சந்தேகத்தின் அடிப்படையில் 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கடந்த 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை ஹைதராபாத் நகரின் குக்கட்பள்ளி, பாலநகா் உள்ளிட்ட இடங்களில் கள் குடித்தவா்களில் 44 போ் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் பெண்களும் அடங்குவா்.
இதில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இருவா் உயிரிழந்தனா். இதில் மேலும் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் இருவா் உயிரிழந்தனா். இதனால் கலப்பட கள் உயிரிழப்பு 4-ஆக அதிகரித்துள்ளது.
கள்ளில் கூடுதல் போதைக்காக வேறு ரசாயனப் பொருள்கள் கலப்படம் செய்யப்பட்டதுதான் உயிரிழப்புகளுக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அந்த கடைகளில் இருந்த கள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.