செய்திகள் :

1 சவரனோ 500 சவரனோ... ரிதன்யாக்களை காப்பாற்றாது, ஆனால்..! இளம்பெண்களுக்கு ஒரு வேண்டுகோள்!

post image

''எனக்கு உடம்புலேயும் தெம்பில்ல... மனசுலேயும் தெம்பில்ல...'' - வரதட்சணைக் கொடுமை தாங்காமல் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்ட திருப்பூர் ரிதன்யாவின் வார்த்தைகள் இவை.

“பண்ணாதக் கொடுமையெல்லாம் பண்ணி இருக்காங்க. என் மகள் சொன்னதையெல்லாம் கேட்டால் கண்ணுல ரத்தம் வந்துடும். அந்தளவுக்கு உடல்ரீதியா கொடுமை செஞ்சிருக்காங்க. 'நான் அனுசரித்து இரு'ன்னு சொல்லி அனுப்பி வெச்சேன்.'' - ரிதன்யாவின் அப்பா சொன்ன வார்த்தைகள் இவை.

ரிதன்யா
ரிதன்யா

'அவசரப்பட்டுட்டியே ரிதன்யா' என்று இறந்துபோன உயிருக்கு பாடம் எடுக்கப் போகிறோமா...? கட்டாயம் இல்லை.

ஏற்கெனவே மகளை இழந்த துக்கத்தில் இருக்கிற ரிதன்யாவின் அப்பா பக்கமே விரல் நீட்டப் போகிறோமா..? இல்லவே இல்லை.

அவர்கள் இருவருமே இந்த ஆண் மைய சமூகம் சொல்லி வைத்த வழமைகளை அடிமாறாமல் பின்பற்றி வாழ்ந்துவந்திருக்கிறார்கள். விளைவு, மகளை பறிகொடுத்துவிட்டு பொதுவெளியில் கதறிக்கொண்டிருக்கிறார்.

ஒரு தலைமுறை, 'உனக்கு படிப்பெதுக்கு; சத்தான சோறெதுக்கு' என்று பெண் குழந்தைகளின் அறிவையும் ஆரோக்கியத்தையும் ஒருங்கே பட்டினிப்போட்டது. 'பொறந்துட்டா யாரால சீர் செஞ்சு கல்யாணம் செஞ்சிக் கொடுக்க முடியும்' என்று கருப்பைக்குள்ளேயே தேடித்தேடிக் கொன்றது. நாமும் அம்புகளை மட்டும் நொந்துவிட்டு, எய்த ஆண் மைய சமூகத்தை கண்டுகொள்ளாமல் கடந்துவிடுவோம். இந்த 'இந்த ஆண் மைய சமூகம்' என்பது நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் சோற்றுக்குள் மறைக்கப்பட்ட முழு பூசணிக்காய் உண்மை.

Women (Representational Image)

'பொட்டக்கோழி கூவியா பொழுது விடியப்போகுது' என்று நம் வீட்டுக் கிழவிகள் பேசியது ஆணாதிக்கம்தான். 'பொம்பள புள்ளைகளுக்கு சமைக்க, தோய்க்க, தேய்க்க சொல்லிக்கொடுத்து காலத்தோட கட்டிக் கொடுத்திடு' என்ற அவர்கள் சொன்ன அறிவுரைகளும் ஆணாதிக்கம்தான். இப்படி இருந்தால்தான், அவர்களை 'வீட்டுக்குப் பெரிய மனுஷி' என்று அவர்களுடைய குடும்பமே ஏற்றுக்கொள்ளும். இதுதான் இந்த ஆண் மைய சமூகத்தின் வெற்றியே. இதை விடுத்து, 'சேவல் கூவலைன்னாலும் பொழுது விடியும் மருமகளே', 'நல்லா படிச்சு, வேலைக்குப்போன பிறகுதான் கல்யாணம் செஞ்சுக்கணும் மகளே', 'உனக்குப் புடிச்ச ஆணை நீயே தேர்ந்தெடுத்துக்கோ. பாட்டி உனக்கு துணையா நிப்பேன்' என்று எந்த பெரிய மனுஷியாவது பேசிவிட்டு, மகனுடைய வீட்டுக்குள் இருந்துவிட முடியுமா என்ன..?

இந்த ஆண் மைய சமூகம், பெண்ணைப் பெற்ற அம்மாக்களுக்கு 'ஒரு ரகசிய டாஸ்க்' கொடுத்திருக்கிறது. அவை, அவர்களுடைய மூளையில் பொருத்தி வைக்கப்பட்ட சிப் போன்றது. தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற டாஸ்க் 'தன் இனத்துக்கு எதிரானது' என்பதே தெரியாமல், 'பொம்பள புள்ளையா அடக்க ஒடுக்கமா நடந்துக்கோ', 'படிச்சிக்கிட்டே போனா யார் மாப்பிள்ளைத் தேடுறது', 'கல்யாணம் நிச்சயமாயிடுச்சு. வேலையை விட்டுடு', 'ஆம்பளை அப்படி இப்படித்தான் இருப்பான். பொம்பளைங்க நாமதான் அணுசரிச்சுப் போகணும்' என்று, அந்த ஆண் மைய சிப்பை தன் மூளையில் இருந்து மகள் மூளைக்கு டிரான்ஸ்ஃபர் செய்துவிடுவார்கள். அது, அடுத்து அவருடைய பேத்தியின் மூளைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகும். இடையில், எந்தப் பெண்ணாவது தெளிந்தப் புத்தியுடன் இருந்து, எதிர்கேள்வி கேட்டுவிட்டால், 'இதெல்லாம் குடும்பத்துப்பொண்ணா' என்று முத்திரைக் குத்தி, ஆண் மைய சமூகத்துக்கு தாங்கள் விசுவாசத்தைக் காட்டி விடுவார்கள். வேறு வழி..? அடுத்த வேளை சோற்றுக்கு அப்பனை, அண்ணன் தம்பியை, புருஷனை, பிள்ளையை நம்பி இருக்கிற மூளைகளால், வேறு என்ன நியாயங்களையும் உரிமைகளையும் சிந்தித்து விட முடியும்?

women empowerment

இதே ஆண் மைய சமூகம், பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தைகளை வேறு மாதிரி மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறது. உன் இனத்தில், உன் சாதியில், உன் மொழியில், உன்னைப் போன்ற உணவுப்பழக்கத்தில் இருப்பவனைத் தேடிச் சென்று உன் மகளைத் திருமணம் செய்து வை. அதற்காக, உன் சக்திக்கு மீறிக்கூட வரதட்சணைக் கொடு. ஊரே மெச்ச திருமணம் செய்தால்தான் 'ஆண்' என்கிற அப்பாவுக்கு பெருமை. ஒருவேளை, கட்டிக்கொடுத்த உன் மகள் திரும்ப உன்னிடமே வந்துவிட்டால் உனக்குத்தான் அவமானம். ஊர் உன்னைக் கேலி செய்யும். ஏனென்றால், நீ பெண்ணைப் பெற்றவன். அதனால், 'ஆணைப் பெற்ற' குடும்பத்தை உன் மகளை அனுசரித்து செல்லச் சொல்...

ரிதன்யாவின் அப்பாவும் இதே மூளைச்சலவை செய்யப்பட்டவர்தான். இனி அவர் அழுதுபுரண்டாலும், போன மகள் திரும்பி வரப்போவதில்லை. 'கோடி கோடியா செலவு பண்ணி கல்யாணம் பண்ணி வெச்சாருப்பா. அந்தப் பொண்ணுக்கு கொடுத்து வெச்சது அவ்ளோ தான்' என்று, இதே ஆண் மைய சமூகம் அவருக்கு ஆறுதல் சொல்லும். அந்த ஆறுதலில் அவர் தன் அந்தரங்க குற்றவுணர்ச்சியை ஆற்றிக்கொள்வார். ஆண் மைய சமூகம் அடுத்த ரிதன்யாவை தேட ஆரம்பித்து விடும்.

உங்களிடம் உங்கள் மகள்களுக்கான ஒரு கூண்டு இருக்கிறது. அது, அவரவர் வசதிப்படி தங்கமோ, வெள்ளியோ, அலுமினியமோ... ஆனால், ஆண் மைய சமூகம் வடிவமைத்த ஒரு கூண்டு கட்டாயமாக இருக்கிறது. முன்னொரு காலத்தில், அதற்கு சாவியாய் மூர்க்கத்தை வைத்திருந்தீர்கள். இப்போது உங்கள் பாசத்தை வைத்திருக்கிறீர்கள். '

'அய்யோ பொட்டப்புள்ள பொறந்திடுச்சு' காலத்தில் இருந்து 'தேவதை பிறந்துவிட்டாள்' என்று போஸ்ட் போடுகிற காலம் வரைக்குமே, 'மகள்கள் பொத்தி வைக்கப்பட வேண்டியவர்கள்' என்றே அப்பாக்கள் நினைப்பதாக தோன்றுகிறது. அப்பாக்களின் அன்பு என்பது, மகள் கேட்கிற உணவை, உடையை வாங்கித் தருவதாக மட்டுமே இருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.

அப்பாக்களின் தேவதைகள், 'அப்பா மனசு கஷ்டப்படுவாரு. அதனால, அவர் சொல்ற ஆணையே கல்யாணம் செஞ்சுக்கிறேன்', 'கணவன் எவ்ளோ கஷ்டப்படுத்தினாலும் என் அன்பான அப்பாவுக்காக பொறுத்துப்பேன்', 'புகுந்த வீட்டை விட்டு பிறந்த வீட்டுக்கு வந்துட்டா அப்பா அவமானப்பட்டுடுவாரு' என்று, மனசுக்குள் செத்தோ அல்லது தற்கொலை செய்தோ அப்பாக்களின் மரியாதைக்கு எந்த பங்கமும் வராமல் காப்பாற்றி விடுகிறார்கள்.

marriage(Representational image)

ஐயா அப்பாக்களே... நீங்கள் நல்லவர்கள்தான்... மகள்களின் மீது உயிரையே வைத்திருப்பவர்கள்தான். மனைவியைத் தூக்கிப்போட்டு மிதித்தாலும், மகளுக்கு வரப்போகிற கணவன் அவளைக் கண் கலங்காமல் காப்பாற்ற வேண்டும் என தேடித்தேடி மாப்பிள்ளையைக் கண்டடைகிறவர்கள்தான். ஆனால், உங்கள் எல்லோரிடமும் உங்கள் மகள்களுக்கான ஒரு கூண்டு இருக்கிறது. அது, அவரவர் வசதிப்படி தங்கமோ, வெள்ளியோ, அலுமினியமோ... ஆனால், உங்கள் எல்லோரிடமும் ஆண் மைய சமூகம் வடிவமைத்த ஒரு கூண்டு கட்டாயமாக இருக்கிறது. முன்னொரு காலத்தில், அதற்கு சாவியாய் உங்கள் மூர்க்கத்தை வைத்திருந்தீர்கள். இப்போது உங்கள் பாசத்தை வைத்திருக்கிறீர்கள். 'மூச்சு முட்டிப்போகிற ரிதன்யாக்கள் 'சத்தியமா உங்களுக்கு கஷ்டம் கொடுக்கணும்னு நினைச்சதே இல்லப்பா' என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு, அவர்கள் உயிரை விட்டு விடுகிறார்கள்.

'இது கூண்டு, தன்னுடைய வானம் இதுவல்ல' என்பது புரிந்த பெண்கள், அது காதல் திருமணமோ அல்லது பெற்றோர் வழி நடந்த திருமணமோ தங்களுக்கான வாழ்க்கையை, தாங்களே தீர்மானிக்கிறார்கள். ஒருவேளை அது வலியே கொடுத்தாலும், சுயமுடிவு எடுக்கத் தெரிந்த பெண்கள் அதை எதிர்த்து நிற்க துணிகிறார்கள். தன் வீட்டுக்குள், தன் பெற்றோரிடம், தனக்காக பேச தெரிந்தப்பெண்கள் 'என் லைஃபை எண்ட் பண்ணிக்கிறேன் பா' என்று சொல்வார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

திருப்பூரில் வரதட்சணை கொடூரம்

மகளின் திருமணத்தில் உங்கள் கெளரவத்தைத் தேடாமல், முடிந்தால் அவளுக்கானத் துணணயை தேடிக்கொடுங்கள். ஆண் மைய சமூகத்தின் அவலம் புரிந்த தெளிவான ஆண்களும் நம்மிடையே அதிகம்.

இளம்பெண்களுக்கு ஒரு வேண்டுகோள். பெற்றவர்கள் தெய்வமாக இருந்தாலும்... அவர்களே உங்கள் உலகமாக இருந்தாலும்... அவர்கள் வசதியில் அதிகமாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, நீங்கள் சொந்தக்காலில் நில்லுங்கள். அதுவரை திருமணம் வேண்டாம் என்கிற முடிவிலும் உறுதியாக நில்லுங்கள். அதுமட்டுமே, புகுந்த வீட்டாரை 'இன்னும் சில உறவுகளாக' உங்களிடம் இருக்க வைக்கும். உங்கள் அடுத்த வேளை உணவு அவர்களை நம்பியென்றால், 'நான் புருஷன்; நாங்க புள்ளைய பெத்தவங்க' என்கிற கோரைப்பற்கள், உன்னிடம் அதன் கூர்மையை காட்டவே எத்தனிக்கும். சொந்தக்கால்... ஆமாம், அதுமட்டுமே 'எல்லாமே முடிஞ்சி போச்சு... நான் போறேன் பா' என்ற ரிதன்யாவில் முடிவில் இருந்து உங்களைக் காப்பாற்றும்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Empowerment: திருநங்கைகளும் குடும்ப வன்முறை வழக்கு தொடர முடியுமா?

திருமண வாழ்வில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் திருநங்கைகளும், தன் கணவர் மற்றும் கணவருடைய குடும்பத்தினர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498A-ன் கீழ் குடும்ப வன்முறை வழக்கு தாக்கல் செய்யலாம... மேலும் பார்க்க

International Widow's Day: ஏன் ஜூன் 23-ம் தேதி சர்வதேச விதவைகள் தினம்?

இன்று சர்வதேச விதவைகள் தினம் (ஜூன் 23). வாழ்க்கைத்துணையை இழந்த பெண்கள் எதிர்கொள்ளும் வறுமை மற்றும் சமூக அநீதிகளை முழு உலகுக்கும் தெரியப்படுத்தி, அவர்களின் அனைத்து உரிமைகளுக்காகப் போராட ஐக்கிய நாடுகள் ... மேலும் பார்க்க