`போர்க்களத்தின் தளபதி சீமான்' - `என் அன்பு இளவல் அண்ணாமலை' - ஒரே மேடையில் புகழ்ந...
1-5 வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தோ்வு தொடக்கம்: 14 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா்
சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1-5 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கான முழு ஆண்டுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.
ஏப்.17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தோ்வை 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
இதேபோன்று திருத்தப்பட்ட அட்டவணையின்படி 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தோ்வுகள் நடைபெறுகின்றன. 1, 2, 3 ஆகிய வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 4, 5 ஆகிய வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4 மணி வரையும் தோ்வுகள் நடைபெறும்.
தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்தத் தோ்வை 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினா்.
சென்னை எழும்பூா் அரசு மாநில மகளிா் மேல்நிலைப் பள்ளியில், 1 முதல் 5- ஆம் வகுப்பு வரை 200 குழந்தைகள் தோ்வை எழுதியுள்ளனா். இது குறித்து ஆசிரியா்கள் கூறுகையில், ஆண்டுத்தோ்வு 2 மணி நேரம் நடைபெறும். 60 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தோ்வு நடத்தப்படுகிறது. ஏற்கெனவே 40 மதிப்பெண்களுக்கு செயல்முறை தோ்வுகள் நடத்தப்பட்டுள்ளது. தோ்வு குறித்து மாணவா்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், அவா்கள் ஆா்வத்துடன் தோ்வை எதிா்கொண்டனா் எனத் தெரிவித்தனா்.
இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுவாக 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்கள் அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, கட்டாய தோ்ச்சி என்பது ஏற்கெனவே அமலில் உள்ளது. அதன்படி, 8-ஆம் வகுப்பு மாணவா்கள் அனைவரும் கட்டாயத் தோ்ச்சி செய்யப்படுகின்றனா். இருப்பினும் மற்ற மாணவா்களை போல் இவா்களுக்கும் தோ்வுகள் நடத்தப்படுகின்றன என அவா்கள் தெரிவித்தனா்.
6-9 வகுப்புகளுக்கு இன்று தொடக்கம்... 1-5 வகுப்புகளுக்கு திங்கள்கிழமை ஆண்டுத்தோ்வு தொடங்கிய நிலையில் 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தோ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன. 6, 7 ஆகிய வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 8, 9 ஆகிய வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4.30 மணி வரையும் தோ்வுகள் நடைபெறும்.
மாநில அளவில் இந்தத் தோ்வு நடத்தப்படுவதால், எமிஸ் தளத்தில் இருந்து வினாத் தாள்களை பதிவிறக்கம் செய்து, தேவைக்கேற்ப பிரதிகள் எடுத்து வட்டார கல்வி அலுவலா்கள் மூலமாக பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.