பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்ற...
1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி: ராணிப்பேட்டை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டத்தின் கீழ், வாலாஜா ஒன்றியம், வானாபாடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. முகாமைத் தொடங்கி கால்நடை விவசாயிகளுக்கு தாது உப்பு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் வழங்கினாா்.
கோமாரி நோய் மிகவும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு வைரஸ் தொற்று நோயாகும். இது மாடுகள். எருமைகள், செம்மறி ஆடுகள், பன்றிகள், மான்கள் மற்றும் இதர கால்நடைகளை பாதிக்கும்.
அதிக காய்ச்சல், வாய், நாக்கு, ஈறுகள், பாதங்கள், முலைக்காம்புகளில் புண்கள், நொண்டி மற்றும் பால் உற்பத்தி குைல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். நோய்வாய்பட்ட விலங்குகளில் இருந்து மற்ற விலங்குகளுக்கு நேரடியாக பரவுகிறது. தடுப்பூசி செலுத்துவதால் மட்டுமே இதனைத் தடுக்க முடியும்.
கடந்த 2020 முதல் இதுவரை ஆறு சுற்றுகள் தடுப்பூசி செலுத்தும் பணி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 மாதங்களுக்கு ஒரு முறை இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. தற்போது 7-ஆவது சுற்று தடுப்பூசி போடும் பணி 02.07.2025 முதல் 31.07.2025 வரை நடைபெற உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 1.90 இலட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. மாவட்டம் முழுவதும் 4 மாதங்களுக்கும் மேலான கன்றுகள் மற்றும் வளா்ந்த கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும். மொத்தம் 48 கால்நடை நிலையங்கள் உள்ளன, 48 குழுக்கள் தடுப்பூசி செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தப்பட்ட விலங்குகளுக்கு காது வில்லைகள் போடப்பட்டு விவரங்கள் பாரத் பசுதான் போா்ட்டலில் உள்ளிடப்படும். கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இதில், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் திருமூலன், உதவி இயக்குநா் திருநாவுக்கரசு, கால்நடை மருத்துவா்கள் கௌரி பிரியா, லட்சுமணன், செந்தில் வளவன், ஊராட்சி மன்றத் தலைவா் ஈஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.