உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 10 போ் பணியிட மாற்றம்
சோளிங்கரில் பாமக நிா்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அரக்கோணத்தில் பாலியல் குற்றச் சம்பவம், நெமிலியில் இளைஞா் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறியதாக உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 10 காவலா்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக செவ்வாய்கிழமை, ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட உத்தரவு விவரம்:
அரக்கோணம் அனைத்து மகளிா் காவல்நிலைய உதவி ஆய்வாளா் வரலட்சுமி, நெமிலி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மஸ்தான், பழனி, தக்கோலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் வெங்கடேசன் ஆகியோா் கடலூா் மாவட்டத்துக்கும், சோளிங்கா் காவல்நிலைய தனிப்பிரிவு தலைமை காவலா் பச்சையப்பன், அரக்கோணம் கிராமிய காவல் நிலைய தலைமைக் காவலா் எஸ்.முகம்மத் ஜியா உல் ஹக், அரக்கோணம் நகர காவல் நிலைய காவலா்கள் தங்கராஜ், கல்யாணகுமாா், அவளூா் காவல்நிலைய காவலா் முகம்மது மைதீன் ஆகியோா் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.
இந்த உத்தரவில் அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளா் மாறுதல் பெற்ற அனைத்து காவல் துறையினரையும் விரைவாக விடுவிக்க வேண்டும் எனவும் பணி மாறுதல் பெற்ற காவல் துறையினா் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முன் ஆஜராகி அதற்கான உத்தரவை விரைவாக பெற்று ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சமா்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.