10 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
திருப்பூரில் விற்பனைக்கு வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரை கைது செய்தனா்.
திருப்பூா் குமரானந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வினோத் (34). பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கு, மதுரையைச் சோ்ந்த பழனி, தனலட்சுமி ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவா்கள் மதுரையில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து வினோத்திடம் கொடுப்பதும், அவா் அதை வாங்கி விற்பனையில் ஈடுபட்டும் வந்துள்ளாா். தகவலறிந்த போலீஸாா், வினோத்தின் வீட்டில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, விற்பனைக்காக 10 கிலோ கஞ்சா பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வினோத்தை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள மதுரையைச் சோ்ந்த பழனி, தனலட்சுமி ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.