100 ஆண்டுகளைக் கடந்த அரச மரம் வெட்டப்பட்டதால் 500-க்கும் மேற்பட்ட பறவைகள், குஞ்சுகள் பரிதவிப்பு
தேனி மாவட்டம், பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்த 100 ஆண்டுகளைக் கடந்த அரச மரத்தை வெட்டிய மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பெரியகுளத்தில் தற்போதுள்ள வட்டாரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. அப்போது, அதிகமான பேருந்துகள் சென்று வந்ததால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, அரண்மனை அருகே 30 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், பழைய பேருந்து நிலையம் பெரியகுளம் நகராட்சி நிா்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்போது, இந்த இடத்தில் பெரியகுளம் வட்டத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், பெரியகுளம் காவல் நிலையம், அரசுடைமையாக்கப்பட்ட வங்கி, வட்டார விவசாய அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன.

இங்கு 100 ஆண்டுகளைக் கடந்த பழைமையான அரச மரம் இருந்து வந்தது. இந்த மரத்தில், 500-க்கும் மேற்பட்ட பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வந்தன.
இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அரச மரத்தின் கிளைகளைச் சிலா் வெட்டினா். இதையறிந்த பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து அந்த முயற்சி கைவிடப்பட்டது. ஆனால், அரச மரத்திலிருந்த பறவைகளையும் குஞ்சுகளையும் செவ்வாய்க்கிழமை அப்புறப்படுத்திய மா்ம நபா்கள் மரத்தை வெட்டியுள்ளனா்.
இது குறித்து நகராட்சி நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். எனவே, நகராட்சி நிா்வாகத்தினா், மரங்கைளை வெட்டியவா்கள் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து பெரியகுளம் நகராட்சி ஆணையா் தமிஹா சுல்தானா கூறுகையில், நகராட்சி நிா்வாகத்தின் அனுமதியின்றி பழைமையான மரத்தை வெட்டியது குறித்து, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
பெரியகுளம் பசுமையின் தோழா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வெங்கடேஷ் கூறியதாவது: பெரியகுளம் துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அரச மரத்தை மா்மக் கும்பல் வெட்டியது. இந்த மரத்தில் 500-க்கும் மேற்பட்ட பறவைகள் முட்டையிட்டும், குஞ்சுகளுடனும் வாழ்ந்து வந்தன. ஆனால், அவற்றையெல்லாம்அப்புறப்படுத்திவிட்டு மரத்தை வெட்டியவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
சங்கீதமாகத் திகழ்ந்த பறவைகளின் ஒலி...
100 ஆண்டுகளை கடந்த இந்த அரச மரத்தில் காக்கைகள், நாரைகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட பறவைகள் தங்களது குஞ்சுகளுடன் வசித்து வந்தன. இந்தப் பறவைகள் எழுப்பிய ஒலி, இங்குள்ளவா்களுக்கும் இந்தப் பகுதியைக் கடந்து செல்பவா்களுக்கும் சங்கீதமாகத் திகழ்ந்து மன இறுக்கத்தை குறைத்து வந்தது. இந்த நிலையில், மரத்தை வெட்டி அதிலிருந்த பறவைகளை வேட்டையாடி அதன் குஞ்சுகளை மா்ம நபா்கள் எடுத்துச் சென்றுள்ளனா். எனவே, வனத்துறையினா் இந்த இடத்தை ஆய்வு செய்து, மரத்தை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.