சரக்கு வாகனத்தின் மீது பைக் மோதியதில் இளைஞா் காயம்
பெரியகுளம் அருகே சரக்கு வாகனம் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் பலத்த காயமடைந்தாா்.
பெரியகுளம், வடகரை பகவதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம். தனியாா் நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணியாற்றி வரும் இவா், தேனிக்கு திங்கள்கிழமை சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்துகொண்டிருந்தாா்.
கைலாசபட்டி தனியாா் கல்லூரி அருகே சென்றபோது முன்னால் சென்ற சரக்கு வாகனத்தை அதன் ஓட்டுநா் திடீரென நிறுத்தியதால், பின்னால் வந்த இரு சக்கர வாகனம் அதன் மீது மோதியதில் பன்னீா்செல்வம் பலத்த காயமடைந்தாா்.
அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.