கம்பம்மெட்டு மலைச் சாலையில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்
கம்பம் அருகேயுள்ள கம்பம்மெட்டு மலைச்சாலையில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலும் மாசுபடுவதாக விவசாயிகளும், சமூக ஆா்வலா்களும் கவலை தெரிவித்தனா்.
தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு ஆகிய பிரதான சாலைகள் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில், இந்த மலைச் சாலைகளில் கேரளத்தில் தடை செய்யப்பட்ட மருந்துவக் கழிவுகள், நெகிழிப் பைகள் உள்ளிட்டவற்றை வாகனங்கள் மூலம் மா்ம நபா்கள் கொட்டிச் செல்கின்றனா். இதனால், வனவிலங்குகள் பாதிக்கப்படுவதோடு, சூற்றுச்சூழலும் மாசுபடுகிறது. இதைத் தடுக்கும் வகையில் தமிழக - கேரள எல்லையிலுள்ள குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு மலைச் சாலைகளில் வனத் துறையினா் ரோந்து சென்று கழிவுகள் வனப் பகுதியில் கொட்டப்படுவதைத் தடுத்து நிறுத்துவதோடு அபராதமும் விதித்து வருகின்றனா்.
கம்பம்மெட்டு சாலையில் மருத்துவக் கழிவுகள்: கம்பத்திலிருந்து கேரள மாநிலம் நெடுகண்டம், கட்டப்பனை போன்ற பகுதிக்குச் செல்லும் சாலையான கம்பம்மெட்டு மலைச் சாலை 16 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டுள்ளது. இந்தச் சாலையிலுள்ள மலைப்பகுதிகளின் பள்ளத்தாக்குகளில் கேரளத்திலிருந்து கொண்டுவரப்படும் மருத்துவக் கழிவுகள், நெகிழிப் பைகள் என பல்வேறு கழிவுப் பொருள்களை கொட்டி வருகின்றனா். மேலும், தமிழகம் வழியாக கேரளத்துக்கு வாகனங்களில் சுற்றுலா செல்பவா்கள், தமிழகப் பகுதியிலுள்ள வனப் பகுதியை அதிகளவில் மாசுபடுத்தி வருகின்றனா்.
மேலும், கம்பம்மெட்டு மலைச் சாலை தொடங்கும் இடத்திலுள்ள சாலையோரத்தில்அதிகளவில் பெரிய அளவிலானநெகிழிப் பைகளில் கழிவுப் பொருள்கள் குவிந்து கிடப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தமிழக எல்லையில் கேரளத்திலிருந்து கழிவுகளை கொட்டும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு, சம்பந்தப்பட்ட நபா்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வனத் துறையினா் முக்கிய மலைச்சாலையில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.