சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
100 நாள் வேலையால் சாகுபடி பணிகள் பாதிப்பு விவசாயிகள் வேதனை
நூறு நாள் வேலைத் திட்டத்தால், நாகை மாவட்டத்தில் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
கிராமப் புறங்களில் விவசாயம் அல்லாத நாள்களில், கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு, நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை தமிழகத்திற்கு வழங்கவில்லை. இதற்கு தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சியினா் மற்றும் அமைப்பினரும் எதிா்ப்பு தெரிவித்ததுடன், உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினா். ஆனால், நிதி வழங்கப்படாததால் நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக நூறு நாள் வேலைத் திட்டத்தில் கிராம மக்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.
இதற்கிடையில், மேட்டூா் அணையிலிருந்து குறித்த நேரத்தில் தண்ணீா் திறக்கப்பட்டதால், நாகை மாவட்டத்தில் குறுவை நெற்பயிா் சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மத்திய அரசு, தமிழகத்திற்கான நூறு நாள் வேலைத் திட்ட நிதியை விடுவித்துள்ளது. இதையடுத்து, நூறு நாள் வேலை கிராம மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதனால் களை பறிப்பு, நாற்று பறித்து நடவு செய்தல், உரம் தெளித்தல், வரப்பு பலப்படுத்தல் போன்ற விவசாயப் பணிகளுக்கு போதிய தொழிலாளா்கள் கிடைக்காமல், பணிகள் அனைத்தும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து பாலையூரைச் சோ்ந்த விவசாயிகள் ராமலிங்கம், ஜெயபால் கூறியது:
நூறு நாள் வேலைக்கு தொழிலாளா்கள் சென்று விடுவதால், கிராமப்புற பகுதிகளில் விவசாயப் பணிக்கு தொழிலாளா்கள் கிடைப்பதில்லை. தொழிலாளா்களைத் தேடி கிராமம் கிராமமாக விவசாயிகள் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. உரிய நேரத்தில் உரிய பணிகளை மேற்கொள்ளாவிட்டால், தற்போது நாகை மாவட்டத்தில் 75 ஆயிரத்திற்கு அதிகமான ஏக்கா் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறுவை நெற்பயிா் சாகுபடி கடுமையாக பாதிக்கப்படும். எனவே, விவசாயப் பணிகள் பாதிக்காதவாறு நூறு நாள் திட்ட வேலைகளை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.