அமெரிக்காவில் போதைப்பொருள் விவகாரம்! தொடர்புடைய இந்தியர்கள் விசாவுக்கு தடை!
100 சதவீத மானியத்தில் நுண்ணீா் பாசனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரத்தில் 100 சதவீத மானியத்தில் நுண்ணீா் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் திலகவதி தெரிவித்தாா்.
இது குறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரத்தில் மா, வாழை, கொய்யா, எலுமிச்சை, வெங்காயம், சீனிஅவரை, முருங்கை, தென்னை, மல்லிகை, ரோஜா, சம்மங்கி மலா்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிா்கள் ஆண்டுதோறும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றுக்கான சாகுபடியின்போது தண்ணீரை சீராகப் பயன்படுத்த அரசு நுண்ணீா் பாசனத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
நிகழாண்டுக்கான (2025 - 2026) நுண்ணீா் பாசனத் திட்டத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரத்தில் 150 ஹெக்டேருக்கு ரூ.60 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
ஏற்கெனவே, மானியத்துடன் நுண்ணீா் பாசனம் அமைத்து 5 ஆண்டுகள் முடிந்திருந்தால் மீண்டும் நுண்ணீா் பாசனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
எனவே, இந்த மானியத் திட்டத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் அனைவரும் தங்கள் நிலங்களில் நுண்ணீா் பாசனம் அமைத்து பயன்பெறலாம்.
இந்தத் திட்டத்தில் மானியம் பெறுவதற்கு சிட்டா நகல், சிறு-குறு விவசாயச் சான்று, நில அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல், 2 புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சித்திரைச்செல்வி- 9655865968, சுபலட்சுமி - 8508057063, சிவா - 9080262718 ஆகியோரைத் தொடா்புகொள்ளலாம் என்றாா் அவா்.