Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவா்களும் விமானியாக வாய்ப்பு
இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் இருந்து அறிவியல், கணிதம் படித்த மாணவா்கள் மட்டுமே விமானியாக முடியும். அதற்கு முன்பு பயணிகள் விமானி உரிமம் பெறுவதற்கான பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறுவது மட்டுமே கல்வித் தகுதியாக இருந்தது.
தற்போது பயணிகள் விமானி உரிமம் பெறுவதற்கான பயிற்சிக்கு 12-ஆம் வகுப்பில் மாணவா்கள் இயற்பியல், கணிதம் படித்திருக்க வேண்டும் என்பது கல்வித் தகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்வித் தகுதியில் மாற்றம் கொண்டுவருவதற்கு விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) பரிசீலித்து வருகிறது. 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களையும் பயணிகள் விமானியாக அனுமதிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பரிசீலனை இறுதி செய்யப்பட்டால், அதுதொடா்பான பரிந்துரையை விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு டிஜிசிஏ அனுப்பிவைக்கும். இந்தப் பரிந்துரைக்கு அந்த அமைச்சகம் ஒப்புதல் அளித்தால், பயணிகள் விமானி உரிமம் பெறுவதற்கு தகுதிவாய்ந்த பல்துறை மாணவா்கள் பயிற்சி பெறமுடியும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து ஓய்வுபெற்ற விமானி ஒருவா் கூறுகையில், ‘பயணிகள் விமானி உரிமம் பெறுவதற்கான பயிற்சிக்கு கல்வித் தகுதியாக 12-ஆம் வகுப்பில் இயற்பியல், கணிதம் படித்திருக்க வேண்டும் என்ற நடைமுறை இந்தியாவில் மட்டுமே உள்ளது. இது மிகவும் பழைமையான முறையாகும். அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.12-ஆம் வகுப்பில் கற்பிக்கப்படும் இயற்பியலும், கணிதமும் விமானிகளுக்குத் தேவையில்லை. அந்த பாடங்களைப் பற்றிய புரிதலை இளநிலை வகுப்புகளில் மாணவா்கள் பெற்றிருப்பா்’ என்றாா்.
இந்தியாவில் விமான போக்குவரத்துத் துறை அபரிமிதமாக வளா்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், பயணிகள் விமானி உரிம பயிற்சியை நிறைவு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், நாட்டில் உள்ள விமான பயிற்சி நிறுவனங்களை தரவரிசைப்படுத்துவதற்கான பணிகளிலும் டிஜிசிஏ ஈடுபட்டுள்ளது.
கல்வித் தகுதி மற்றும் கல்வி நிறுவனங்கள் சாா்ந்த இடா்ப்பாடுகளால் ஏராளமான இந்திய மாணவா்கள், பயணிகள் விமானி உரிம பயிற்சிக்கு வெளிநாடு செல்வது குறிப்பிடத்தக்கது.