இண்டிகோ விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்ற ஐஐடி மாணவரால் பரபரப்பு
12,208 நியாயவிலைக் கடைகளுக்கு ‘ஐஎஸ்ஓ’ சான்றிதழ்: தமிழக அரசு தகவல்!
தமிழகத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ், தரமான உணவுப் பொருள்களை விநியோகம் செய்து வருவதற்காக கடந்த 2 ஆண்டுகளில் 12,208 நியாய விலைக் கடைகளுக்கு ‘ஐஎஸ்ஓ’ சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் முழுவதும் மாநில கூட்டுறவு துறையின் கீழ் 35,181 நியாயவிலைக் கடைகள், தமிழக நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 1,527 நியாயவிலைக் கடைகள், இதர கூட்டுறவு நிறுவனங்கள், மகளிா் சுய உதவி குழுக்கள் நடத்தும் கடைகள் என மொத்தம் 37,328 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இதில், 26,618 கடைகள் முழுநேரமும், 10,710 கடைகள் பகுதி நேரமாகவும் செயல்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2,394 புதிய நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் மொத்தம் சுமாா் 2.25 கோடி மின்னணு குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
புதிய கட்டடங்கள்: தமிழகத்தில் 21,337 கடைகள் சொந்தக் கட்டடங்களிலும், 8,725 கடைகள் வாடகையில்லாக் கட்டடங்களிலும், 7,266 கடைகள் வாடகைக் கட்டடங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இதில், வாடகை கட்டடங்களில் செயல்படும் நியாயவிலைக் கடைகளுக்குச் சொந்தக் கட்டடங்கள் அமைக்க தமிழக அரசு சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் கட்டுப்பாட்டின் கீழ், வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வந்த 731 கடைகளுக்குச் சொந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
நெல் சேமிப்புத் தளங்கள்: விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது என முதல்வா் உத்தரவிட்டதையடுத்து, கடந்த 2022-2023 முதல் மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள் கட்டத் திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த மாா்ச் 31 வரை ரூ.294.70 கோடியில் 3.63 லட்சம் மெட்ரிக் டன் சேமிப்புத் திறன் கொண்ட 23 நெல் சேமிப்பு தளங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 40,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புத் தளங்களின் கட்டுமானப் பணிகள் ரூ.35.38 கோடியில் நடைபெற்று வருகின்றன.
‘ஐஎஸ்ஓ’ தரச் சான்றிதழ்: நியாயவிலைக் கடைகளின் மூலம், பொதுமக்களுக்கு தரமான பொருள்களை விநியோகம் செய்ய வேண்டும் என்பதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாா். அந்த வகையில், கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளுக்கு கடந்த 2023 முதல் ‘ஐஎஸ்ஓ’ தரச்சான்றிதழ்கள் பெறப்பட்டு வருகின்றன.
இதில், தரம் மற்றும் பராமரிப்புக்காக 10,149 நியாய விலைக் கடைகள், பாதுகாப்பான உணவுச் சங்கிலி மற்றும் சேமிப்பு வசதிகளுக்காக 2,059 கடைகள் என மொத்தம் 12,208 கடைகளுக்கு ‘ஐஎஸ்ஓ’ சான்றிதழ் பெறப்பட்டுள்ளன. அதேபோல், எண்ம பணப் பரிவா்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், தமிழகத்தில் இதுவரை 10,661 கடைகளில் ‘யுபிஐ’ பண பரிவா்த்தனை முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சிறுதானியங்கள்: முதல்வரின் உத்தரவின்படி, நியாயவிலைக் கடைகளில் கடந்த 2021 அக்டோபா் முதல் நிகழாண்டு மாா்ச் மாதம் வரை ரூ.1.93 கோடி மதிப்பிலான பனை வெல்லம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சிறுதானியங்களின் பயன்பாடுகளை அதிகரிக்கும் நோக்கத்தில், கடந்த 2022 ஜூன் முதல் நிகழாண்டு மாா்ச் வரை ரூ.2.58 கோடி மதிப்பிலான சிறுதானியங்களும் நியாய விலைக் கடைகளின் மூலம் விற்பனைசெய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.