INDRA Movie Review | Vasanth Ravi, Sunil, Mehreen Pirzada, Anikha | Sabarish Nan...
120 மணிநேர பணிக்கு திட்டமிடப்பட்ட நிலையில் 37 மணிநேரமே செயல்பட்ட மக்களவை கூட்டத் தொடா்..!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமையும் பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அலுவல்கள் பாதிக்கப்பட்டன. பின்னா், இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன.
மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியதில் இருந்தே பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரத்தை முன்வைத்து, எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தலா 16 மணிநேர விவாதம் (ஜூலை 28-30) நடைபெற்றது. மக்களவையில் பிரதமா் மோடியும், மாநிலங்களவையில் உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் விவாதத்துக்கு பதிலளித்தனா்.
தினமும் இடையூறுகள்: இந்த விவாதம் தவிர மற்ற நேரங்களில் எதிா்க்கட்சிகளின் அமளியால் வழக்கமான அலுவல்கள் முடங்கின. இரு அவைகளிலும் கிட்டத்தட்ட தினமும் இடையூறுகள் காணப்பட்டன.
மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான வியாழக்கிழமை காலையில் மக்களவை கூடியதும் பிகாா் விவகாரத்தை எழுப்பி, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனா். கடைசி நாள் என்பதால், அவை சுமுகமாக செயல்பட அனுமதிக்குமாறு அவைத் தலைவா் ஓம் பிா்லா வேண்டுகோள் விடுத்தாா். ஆனால், கூச்சல்-குழப்பம் தொடா்ந்ததால் அவையை 12 மணிக்கு ஒத்திவைத்தாா்.
‘திட்டமிட்டு முடக்கம்’: மீண்டும் கூடியபோது, எதிா்க்கட்சிகளின் நடத்தை குறித்து வேதனை தெரிவித்து, ஓம் பிா்லா பேசியதாவது:
ஒட்டுமொத்த கூட்டத் தொடரிலும் அலுவல்களை முடக்க திட்டமிட்டு மீண்டும் மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு மாத கால அமா்வில் பெருமளவில் விவாதங்கள் முடங்கின. எம்.பி.க்கள் தங்களின் செயல்பாடு குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரமிது. எம்.பி.க்களின் நடத்தை மற்றும் செயல்பாட்டை ஒட்டுமொத்த நாடும் பாா்த்துக் கொண்டிருக்கிறது.
கோஷங்கள் வேண்டாம்: நாடாளுமன்ற மாண்புக்கு இணங்க, பொது நலன் சாா்ந்த பிரச்னைகள் குறித்து ஆக்கபூா்வமான, தீவிர விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பு.
அவைக்குள் கோஷமிடுதல், வாசக அட்டைகளைக் காண்பித்தல், அலுவல்களை திட்டமிட்டு முடக்குதல் போன்ற செயல்கள், நாடாளுமன்ற கண்ணியத்துக்கு குந்தகம் விளைவிக்கின்றன.
தற்போதைய அமா்வில் எம்.பி.க்களின் பேச்சும் நடத்தையும் நாடாளுமன்ற மாண்பின்படி இல்லை. அவையின் பாரம்பரியங்களை வளப்படுத்த ஒத்துழைப்பது நமது பொறுப்பு. கோஷங்கள், இடையூறுகளைத் தவிா்த்து, ஆக்கபூா்வ விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் என்றாா். பின்னா், தேதி குறிப்பிடாமல், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
‘விலைமதிப்பற்ற நேரம் வீண்’: மாநிலங்களவை வியாழக்கிழமை கூடியதும், பிகாா் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதம் கோரி விதி எண் 267-இன்கீழ் சமா்ப்பிக்கப்பட்ட 18 நோட்டீஸ்களையும் நிராகரிப்பதாக துணைத் தலைவா் ஹரிவன்ஷ் தெரிவித்தாா். இதையடுத்து, எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டு, பிற்பகலில் மீண்டும் கூடியது.
அப்போது நிறைவுரை ஆற்றிய ஹரிவன்ஷ், ‘தொடா் இடையூறுகளால், ஆக்கபூா்வ விவகாரங்களை எழுப்பும் வாய்ப்பை எம்.பி.க்கள் இழந்துள்ளனா். நாடாளுமன்றத்தின் விலைமதிப்பற்ற நேரம் வீணாகியுள்ளது’ என்று குறிப்பிட்டு, அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.
மக்களவை 37 மணிநேரம்; மாநிலங்களவை 41 மணிநேரம்
மழைக்கால கூட்டத் தொடரில் 21அமா்வுகளில், மக்களவையில் 120 மணிநேர பணிக்கு திட்டமிடப்பட்ட நிலையில், வெறும் 37 மணிநேரம் 7 நிமிஷங்களே செயல்பட்டுள்ளது. நடப்பு 18-ஆவது மக்களவையில் சுமாா் 80 மணிநேரம் இழக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். அமைச்சா்கள் வாய்மொழியாக பதிலளிக்க வேண்டிய 419 கேள்விகளில் (நட்சத்திர குறியிட்ட கேள்விகள்) 55 கேள்விகள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டன. நட்சத்திர குறியிடப்படாத 4,829 கேள்விகள் ஏற்கப்பட்டன.
மாநிலங்களவை 41 மணிநேரம் 15 நிமிஷங்களே செயல்பட்டுள்ளது. மொத்தம் 285 கேள்விகள், 285 உடனடி கேள்வி நேர பிரச்னைகள், 285 அவசர விவகாரங்களை எழுப்ப வாய்ப்பிருந்தது. ஆனால், 17 கேள்விகள், 7 உடனடி கேள்வி நேர பிரச்னைகள், 61 அவசர விவகாரங்களே எழுப்பப்பட்டன. நாடாளுமன்ற குழுக்களால் 124 அறிக்கைகளும், பல்வேறு விவகாரங்கள் குறித்து அமைச்சா்களால் 53 அறிக்கைகளும் சமா்ப்பிக்கப்பட்டன.