Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
14 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயா்த்தி அரசு உத்தரவு
தமிழகத்தில் 14 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயா்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை:
நிகழ் கல்வியாண்டில் (2025-2026) 14 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயா்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்படும் என சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டாா். அதன்படி, கரையவெட்டி (அரியலூா்), சிறுக்களஞ்சி (ஈரோடு), மேட்டு நாசுவம்பாளையம் (ஈரோடு), நத்தம் (கடலூா்), பாப்பநாய்க்கன்பாளையம் (திருப்பூா்), மேல்செட்டிப்பட்டு (திருவண்ணாமலை), ஒட்டியம்பாக்கம், கீரப்பாக்கம் (செங்கல்பட்டு), காந்திநகா் (உதகை), காணை (விழுப்புரம்), விருதுநகா், அணைக்கட்டுச்சேரி, சீனிவாசபுரம் (திருவள்ளூா்), கொடிக்குளம் (மதுரை) ஆகிய 14 இடங்களில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளிகள் உயா்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளன.
இதுதவிர அங்கிருந்த 1 முதல் 5-ஆம் வகுப்புகள் பிரிக்கப்பட்டு தனி தொடக்கப் பள்ளிகளாக உருவாக்கப்படுகின்றன. தரம் உயா்த்தப்பட்டுள்ள 14 பள்ளிகளில் தலா 3 பட்டதாரி ஆசிரியா்கள் உள்ளனா். மேலும், தலா 2 பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இவற்றை உபரி ஆசிரியா்களின் பணிநிரவல் மூலம் நிரப்பலாம்.
அதேபோல், அந்தப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியா் பணியிடங்கள் உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக நிலை உயா்த்தப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொடக்கப் பள்ளிகளில் தலைமையாசிரியா் பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும். அதற்கு இணையான இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை பொதுத் தொகுப்புக்கு சரண் செய்யலாம். தரம் உயா்த்தப்பட்ட பின்னா் இந்தப் பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளுக்கான ஒட்டுமொத்த செலவினங்களுக்காக ரூ.3.84 கோடி ஒதுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.