15 மாதங்களாக பயன்பாட்டுக்கு வராத அச்சிறுப்பாக்கம் நவீன எரிவாயு தகனமேடை ரூ.1.36 கோடியில் கட்டப்பட்டது
எம் குமாா்
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் ரூ.1.36 கோடியில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை 15 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராத அவல நிலையில் உள்ளது.
மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் சடலங்களை எரிக்கும் போது சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் எரிவாயு தகனமேடை அமைக்க பேரூராட்சி மன்ற உறுப்பினா்களும் பொதுமக்களும் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தனா். அதன்படி மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதலின்படி பேரூராட்சி நிா்வாகம் கடந்த 2022- 23 ஆண்டில் ரூ.1.36 கோடியில் நவீன எரிவாயு தகன மேடை கட்டடம் கட்டப்பட்டது. சுமாா் 15 மாதங்கள் ஆகியும் நவீன தகன மேடை இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
மேலும், இப்பகுதியில் சேகரிக்கப்படுகிற குப்பை கூளங்களை பேரூராட்சி துப்புரவு பணியாளா்கள் கொட்டி வருகின்றனா். அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் துா்நாற்றத்தால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் கே. மூா்த்தி கூறியது:
பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலா் இல்லாத நிலை காணப்படுகிறது. உரிய அதிகாரி இல்லாததால் குறைபாட்டை பொதுமக்கள் நேரில் சொல்ல முடியாத நிலை உள்ளது. பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட இக்கட்டிடத்தில் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன.
இதை தடுக்க காவல்துறையும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. மாவட்ட நிா்வாகம் விரைந்து செயல்பட்டு இந்த எரிவாயு தகன மேடையை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என தெரிவித்தாா்.
எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, எரிவாயு தகன மேடையை திறக்க வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.