நாய்கள் முக்கியமா? குழந்தைகள் முக்கியமா? ஜி.பி. முத்துவுக்கு நடிகை பதிலடி!
1967 - 1977 - 2026: `அண்ணா, எம்.ஜி.ஆர் வழியில் விஜய்' - முன் நிற்கும் அந்த 3 சவால்கள்!
மதுரையில் த.வெ.க-வின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தவிருக்கிறார் விஜய். மாநாட்டு மேடையின் உச்சியில் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரோடு விஜய் இருப்பதைப் போல 'வரலாறு திரும்புகிறது' என்ற பெயரில் ஒரு கட் அவுட்டும் வைக்கபட்டிருக்கிறது. விஜயும் சமீபமாக 1967 மற்றும் 1977 தேர்தல்களில் நடந்த புரட்சியை 2026 தேர்தலில் நடத்திக் காட்டுவேன் என அழுத்தம் திருத்தமாக பேசி வருகிறார்.
1967-ல் காங்கிரஸை வழியனுப்பிவிட்டு மாநிலக் கட்சியாக தி.மு.க-வை அண்ணா அரியணை ஏற்றியதையும், 1977-ல் தி.மு.க-வை ஒற்றை எதிரியாக நிலை நிறுத்தி எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வை ஆட்சிக்கட்டிலில் ஏற்றியதையும்தான் விஜய் குறிப்பிடுகிறார். அவ்வளவு பெரிய வெற்றியை விஜய்யால் 2026 தேர்தலில் சாத்தியப்படுத்த முடியுமா? விஜய்க்கான சவால்கள் என்னென்ன?
நீண்ட நெடிய பயணம்:
தேர்தல் அரசியலில் விஜய் தனது ஹீரோக்களாக முன் வைக்கும் அண்ணாவும் எம்.ஜி.ஆரும் அரசியலில் நீண்ட நெடிய பயணத்தை கொண்டிருந்தவர்கள். அண்ணா நீதிக்கட்சியில் ஆரம்பித்து பெரியாரோடு நீண்ட காலம் பயணித்து, ஒரு கட்டத்தில் அவரோடு முரண்பட்டு 1949-ல் தி.மு.க-வை தொடங்குகிறார். அண்ணா ராபின்சன் பூங்காவில் தி.மு.க என்கிற பெயர் பலகையை திறந்து வைத்த போதே அனுபவமிக்க பழுத்த அரசியல்வாதி.
மேலும், கட்சி ஆரம்பித்தவுடனேயே அண்ணா கோட்டைக் கனவை காணவில்லை. மெதுமெதுவாக அடியெடுத்து வைத்தார். 1952 தேர்தலில் தி.மு.க போட்டியிடவே இல்லை. தேர்தலை புறக்கணித்தது. 1957-ல் 15 இடங்களில் தி.மு.க வென்றது. 1962-ல் 50 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சியானது. ஆனால், அந்தத் தேர்தலில் அண்ணாவே ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். 1967 தேர்தலில்தான் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது.
தி.மு.க என்கிற கட்சியை ஆரம்பித்த பிறகுமே கூட 18 ஆண்டுகள் அண்ணா உழைத்திருக்கிறார். எம்.ஜி.ஆரும் அ.தி.மு.க-வை ஆரம்பித்து உடனே ஆட்சிக்கட்டிலில் ஏறி விடவில்லை. 1950 களிலிருந்து தி.மு.க-வில் பயணித்திருந்தார். பல தேர்தல்களில் தி.மு.க-வுக்காக சூறாவளி பிரசாரம் செய்தார். படங்களின் வழி திராவிட அரசியல் பேசினார். 1962-ல் சட்ட மேலவை உறுப்பினரானார். 1967-ல் பரங்கிமலை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார்.
எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர் சுடப்பட்ட காயத்தோடு இருக்கும் படம் தி.மு.க ஆட்சிக்கு வர பேருதவியாக இருந்தது. அண்ணா இறந்த பிறகு கருணாநிதியுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் அ.தி.மு.க என்கிற கட்சியை தொடங்குகிறார். ஏற்கனவே அரசியல் பழகியிருந்த எம்.ஜி.ஆரின் ரசிகர் மன்றங்கள் அப்படியே கட்சிக்குள் வந்தன. 5 ஆண்டுகள் தி.மு.க-வுக்கு எதிராகவும் கருணாநிதிக்கு எதிராகவும் தன்னை வலுவாக நிலைப்படுத்திக் கொண்டு, அதன்பிறகுதான் ஆட்சியைப் பிடிக்கிறார்.
ஆக, அண்ணாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் பின்புலத்தில் நீண்ட நெடிய அரசியல் பயணம் இருக்கிறது. அவர்கள் முழுமையான அரசியல்வாதிகள். ஆனால், விஜய்யிடம் அந்த நீண்ட நெடிய அரசியல் பயணம் இல்லை. அவர் முழுமையான அரசியல்வாதியாகவும் மாறவில்லை. சினிமா வெளிச்சத்தில் ஒளிரும் நட்சத்திரமாகவே இருக்கிறார். மக்களும் அவரை நட்சத்திரம் என்கிற அந்தஸ்தை தாண்டி அரசியலராக பார்க்கிறார்களா என்பதற்கு இப்போது வரை எந்த நிரூபணமும் இல்லை.
தேர்தல் வியூகம் :
1967 தேர்தலில் தி.மு.க ஒன்றும் தனித்து போட்டியிட்டு வெல்லவில்லை. தி.மு.க-வின் கூட்டணிக்குள் 8 கட்சிகள் இருந்தனர். குலக்கல்வியை ஆதரித்த ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் தி.மு.க-வின் கூட்டணிக்குள் இருந்தது. காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக முரண்பாடுகள் இருந்தாலும், சில கட்சிகளை அண்ணா அரவணைத்து கூட்டணி ஆக்கிக்கொண்டார்.

அந்த சூட்சமம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. கூட்டணி இருந்தாலும் தனிப்பெரும்பான்மை பெற்றார். எம்.ஜி.ஆர் மிகப்பெரிய உச்ச நட்சத்திரம்தான். அவருக்கு மக்கள் கூட்டம் வெகுவாக கூடியதுதான். ஆனால், அவருமே ஆரம்பத்திலிருந்தே மற்ற கட்சிகளை அரவணைத்து செல்வதில் கவனமாக இருந்தார்.
அ.தி.மு.க-வின் முதல் தேர்தலான திண்டுக்கல் இடைத்தேர்தலிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் பேசி அதன் வேட்பாளரை வாபஸ் பெற வைத்தார். அந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெல்லவும் செய்தது. 1977 நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸோடு கூட்டணி சென்றார். அதே ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீக் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தார்.
விஜய் பெரும் பிம்பங்களாக முன்னிறுத்தும் அண்ணாவும் எம்.ஜி.ஆருமே கூட அரசியல் சூழலை உணர்ந்து கூட்டணியை கட்டியமைத்திருந்தனர். அதுதான் அவர்களை வரலாறு படைக்க வைத்தது. 'ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு!' என விஜய் விக்கிரவாண்டியில் ஒரு அரசியல் குண்டை வீசினார். ஓராண்டு ஓடிவிட்டது.

இன்னும் எந்தக் கட்சியும் விஜய் பக்கம் வரவில்லை. கூட்டணியில்லாமல் முதல் தேர்தலிலேயே ஒரு கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. வரவிருக்கும் 6 மாதங்களும் விஜய்க்கு பெரும் சவால்மிக்க காலகட்டமாகவே இருக்கும்.
பொசிஷனிங்:
தேர்தலில் ஒரு கட்சி தங்களை எந்த நிலையில் நிறுத்தி மக்களிடன் சென்று சேர்கிறது என்பது ரொம்பவே முக்கியம். அதாவது, தங்களுக்கான எதிரி, வில்லன் யார் என்பதை அடையாளம் காட்டி அவர்களுக்கு எதிராக வலுவாக தங்களை பொசிஷன் செய்ய வேண்டும். 1967 க்கு முன்பாக தி.மு.க மத்திய அரசை தங்களின் வில்லனாக நிறுவிக் கொண்டது.
தீர்க்கமாக மாநில சுயாட்சுயை பேசியது. இந்தித் திணிப்புக்கு எதிராக வலுவாக போராடியது. ஒரு கட்டம் வரைக்கும் திராவிட நாடு கோரிக்கையிலும் உறுதியாக நின்றது. பஞ்சம் பரவியிருந்த காலக்கட்டத்தில் மத்திய அரசின் போதாமைகளை குறிவைத்து, 'ரூபாய்க்கு ஒரு படி அரிசி நிச்சயம். மூன்று படி லட்சியம்!' என அண்ணா தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். அதன் பலனாகத்தான் இந்தியாவில் முதல் முறையாக மாநிலக் கட்சி ஒன்று ஆட்சியைப் பிடித்தது.
கருணாநிதியுடன் ஏற்பட்ட முரண்பாட்டில்தான் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வை தொடங்கினார். கட்சி ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே எம்.ஜி.ஆருக்கு நம்பியார் கருணாநிதிதான். அந்த எதிர்ப்பை வலுவாக்கிக் கொள்ள எமெர்ஜென்சியை ஆதரித்து இந்திரா காந்தியோடு நட்பாகிக் கொள்ளக் கூட எம்.ஜி.ஆர் துணிந்தார். 'தீயசக்தி தி.மு.க' என்கிற அ.தி.மு.க-வின் அரசியல் அரிச்சுவடியை எழுதிக் கொடுத்தது எம்.ஜி.ஆர் தான்.
அண்ணாவைப் போல எம்.ஜி.ஆரைப் போல விஜய் தன்னை எங்கே பொசிஷன் செய்திருக்கிறார் என்பது பெரிய கேள்வியே. அரசியல் எதிரி, கொள்கை எதிரி என திமுகவையும் பாஜகைவையும் வம்பிழுக்கிறார். ஆனால், அவர்களுக்கு எதிராக அவர்களை எதிர்க்கும் ஹீரோவாக மக்கள் மனதில் பதியும் வகையில் விஜய் அரசியல் செயல்பாடு இருக்கிறதா என்பது கேள்வே.
மேற்குறிப்பிட்ட இந்த விஷயங்கள்தான் விஜய்க்கு மிகப்பெரிய சவால்களாக இருக்கக்கூடும். மதுரை மாநாட்டிலிந்து இந்த சவால்களை விஜய் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.