செய்திகள் :

Trump: புடினின் இழுத்தடிக்கும் தந்திரம்; நெருங்கியும் நெருங்காத ரஷ்யா, உக்ரைன் போர் நிறுத்தம் - இனி?

post image

ரஷ்ய - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபர் ட்ரம்ப் கடந்த சில நாட்களில் மேற்கொண்ட நகர்வுகள் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

தான் ஆட்சிக்கு வந்தால் ஒரே நாளில் ரஷ்ய உக்ரைன் போரை நிறுத்திவிடுவேன் என்று அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் சொன்ன ட்ரம்ப்பால், வெள்ளை மாளிகையை மீண்டும் பிடித்து ஆறுமாதமாகியும் தன் வாக்குறுதியை காப்பாற்ற முடியவில்லை.

பதவிக்கு வந்த ஒரு சில வாரங்களிலேயே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்து அவரை பொது வெளியில் பத்திரிகையாளர்கள் முன்னால் மிரட்டாத குறையாக ஒரு பெரும் நாடகத்தை அரங்கேற்றினார்கள் ட்ரம்ப்பும் அவரது துணை அதிபர் ஜே.டி.வேன்ஸும்.

ஆனால் ட்ரம்ப் இந்த உத்தியை ரஷ்ய அதிபர் புடினுடன் கையாள முடியாது .

Trump - Putin
Trump - Putin

கடந்த மூன்றாண்டுகளாக உக்ரைன் மீதான தாக்குதலை நடத்தி வரும் ரஷ்ய அதிபர் புடினுடன் , அமெரிக்கா ரஷ்யா மீது விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளையும் , சர்வதேச நீதிமன்றம் போர்க்குற்றங்கள் தொடர்பில் ரஷ்ய அதிபர் புட்டின் மீது பிறப்பித்த கைது வாரண்ட் போன்ற நடவடிக்கைகளையும் மீறி, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் கடந்த வாரம் பேச்சுவார்த்தைகளை நடத்தினார் ட்ரம்ப்.

பேச்சுவார்த்தைகளுக்கு முன் சில வாரங்களாகவே, ரஷ்யா , உக்ரைன் மீதான போரை நிறுத்தும் விஷயத்தில், புடினின் நடவடிக்கைகள் தனக்கு அலுப்பூட்டுவதை பல முறை ட்ரம்ப் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளில் உடனடி போர் நிறுத்தத்துக்கு புடின் ஒப்புக்கொள்ளாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அலாஸ்கா பேச்சுவார்த்தைகளுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக எச்சரித்திருந்தார் ட்ரம்ப்.

இருந்தாலும், ட்ரம்ப் - புடின் சந்திப்பைப் பற்றி கவலை கொண்ட ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பிரிட்டிஷ் தலைவர்கள், ஒரு தலைபட்சமாக ஒரு அமைதி ஒப்பந்தத்தை புடினுடன் எட்ட வேண்டாம் என்று ட்ரம்புக்கு எச்சரித்திருந்தனர்.

இந்தப் பின்னணியில், அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில்பெரும் எதிர்பார்ப்புகளுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் போர் நிறுத்தம் பற்றி எந்த ஒரு உடன்படிக்கையையும் ட்ரம்ப்பால் எட்ட முடியவில்லை.

Vladimir Putin - Donald Trump

பேச்சுவார்த்தைகளின் போது என்ன நடந்தது என்பது பற்றி அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. செய்தியாளர்களிடையே இரு தலைவர்களும் சுருக்கமான அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுவிட்டு, கேள்விகளுக்கு இடமளிக்காமல் சென்று விட்டனர்.

புடினின் இழுத்தடிக்கும் தந்திரம்?

ஓரிரு “பெரிய விஷயங்கள்” பற்றி இன்னும் தீர்வு எட்டப்படவில்லை என்று ஒப்புக்கொண்ட ட்ரம்ப், ஒப்பந்தம் ஏற்படாதவரை எந்த ஒப்பந்தமும் இல்லை என்பதுதான் உண்மை என்றார்.

பரந்துபட்ட புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதாக புடின் சொன்னாலும், அவர் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை. அமைதி ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக அவர் சொல்லியிருக்கிறார்.

புடினின் இந்த “அமைதி ஒப்பந்ததுக்கு தயார், ஆனால் போர் நிறுத்தத்துக்கு தயாரில்லை” என்ற நிலைப்பாடு, உடனடி போர் நிறுத்தத்தை எதிர்பார்த்த, உக்ரைன் மற்றும் ஐரோப்பிய தலைவர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியிருக்கிறது. இது அமைதி பேச்சுவார்த்தைகள் என்ற பெயரில் மேலும் போரை நீட்டிக்கவும், பிரச்னையை இழுத்தடிக்கவும் புடின் மேற்கொள்ளும் தந்திரம் என்றே அவர்கள் கருதுகின்றனர்.

ஏற்கனவே இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய மூன்றாண்டுகளாக நடக்கும் இந்த போர் மேலும் தொடர்வது மேலும் துயரத்தையே அப்பகுதி மக்களுக்கு உருவாக்கும் என்ற கவலை ஐரோப்பியர்களுக்கு இருக்கிறது.

ஐரோப்பியத் “தோழமை”

அலாஸ்கா சந்திப்பை அடுத்து புடினுடன் தான் நடத்திய பேச்சுவார்த்தைகளைப் பற்றி விவாதிக்க , உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வாஷிங்டன் அழைத்திருந்தார் ட்ரம்ப்.

கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா வந்த ஜெலன்ஸ்கி ட்ரம்ப்பால் ஏறக்குறைய பொதுவெளியில் அவமானப்படுத்தப்பட்டது போன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவலையினாலோ என்னவோ , பிரிட்டிஷ் பிரதமர் சர் கியர் ஸ்டார்மர் , பிரெஞ்சு அதிபர் எமானுவேல் மேக்ரோன், ஜெர்மானிய சான்சலர் ஃப்ரீட்ரிக் மெர்ட்ஸ் ( Frederick Merz) உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்களும் வாஷிங்டன் சென்று பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டனர்.

ஜெலன்ஸ்கிக்கும் உக்ரைனுக்கும் தங்கள் தோழமையை வெளிப்படுத்தவும், ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தத்துக்கு ஒரு விலையாக உக்ரைன் அதன் நிலப்பரப்பை விட்டுத்தர ஜெலன்ஸ்கி மீது ட்ரம்ப் அழுத்தம் தருவதைத் தடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர்.

ட்ரம்ப் ஜெலன்ஸ்கி சந்திப்பு

முதலில் ஜெலன்ஸ்கியை தனியே சந்தித்த ட்ரம்ப், பின்னர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடனும் கூட்டு சந்திப்பு ஒன்றை நடத்தி புடினுடன் தான் விவாதித்த விஷயங்கள் பற்றி அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

அமைதியின் விலை என்ன?

அமைதி ஒப்பந்தத்திற்காக ரஷ்யா கோருவது என்ன என்பது பற்றி அதிகார பூர்வமாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், ரஷ்ய அதிபர், ரஷ்யா இந்தப் போரில் கைப்பற்றியிருக்கும் உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டொன்யெஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் போன்ற பகுதிகளை ரஷ்யாவின் ஆளுகைக்கு மாற்றவும், வேறு சில பகுதிகளையும் கோரியிருக்கிறார் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஒப்பந்தத்துக்குப் பின்னர் , போர் நிறுத்தப்படும், போர் நின்ற பின்னர் தற்போதைய போர்க்கால கட்டுப்பாட்டு எல்லைகள் அப்படியே ரஷ்ய உக்ரைன் எல்லைகளாக அங்கீககரிக்கபடும் என்பது புடினின் நிலைப்பாடு.

அமைதி ஒப்பந்தத்துக்கு விலையாக உக்ரைன் தனது நிலப்பரப்பை விட்டுத்தராது என்ற உறுதியான நிலைப்பாட்டை ஏற்கனவே ஜெலன்ஸ்கி தெளிவுபடுத்தியிருந்தார். எனினும் இந்த சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அவர் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

உக்ரைனுக்கு உத்தரவாதங்கள் பலனளிக்குமா?

அமைதி ஒப்பந்தத்துக்குப் பின்னர் உக்ரைனுக்கு “பாதுகாப்பு உத்தரவாதங்கள்” தரப்படவேண்டும் என்பது ஐரோப்பிய தரப்பின் கோரிக்கையாக இருந்தது.

உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ( NATO) பாதுகாப்புக் கூட்டமைப்பில் சேர பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறது. இது ரஷ்யாவின் கடும் எதிர்ப்பைக் கிளறிய நிலையில், உக்ரைன் நேட்டோவில் சேர்த்துக்கொள்ளப்படாது என்று ட்ரம்ப் ஏறக்குறைய தெளிவாக்கிவிட்டார்.

இந்த நிலையில், நேட்டோ பாணியிலான ஒரு பாதுகாப்பு உத்தரவாதத்தை அமெரிக்காவும் மேற்குலகும் உக்ரைனுக்குத் தரும் என்று ட்ரம்ப் ஜெலன்ஸ்கியிடம் உறுதியளித்திருக்கிறார் என்று செய்திகள் கூறுகின்றன.

ஆனால் இது போன்ற உறுதிமொழிகள், உத்தரவாதங்கள் எல்லாம் நேட்டோ உறுப்பு நாடுகளுக்குக் கிடைக்கு அதே அளவு பாதுகாப்பை உறுதி செய்யுமா என்பது சந்தேகம்தான்.

ஜெலன்ஸ்கி

மேலும் புடினுடனான பேச்சுவார்த்தைகளின் போது, இந்த அமைதி ஒப்பந்தத்துக்குப் பின் , ரஷ்யா மேலும் ராணுவ ஊடுருவல்களை நடத்தாமல் இருக்க உக்ரையினுக்குள் ஐரோப்பிய படையினர் ( நேட்டோ படைகள் அல்ல) நிலை நிறுத்தப்படும் என்பதற்கு புடின் இணங்கினாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஆனால் , ரஷ்யா இதற்கு இணங்கும் என்று ட்ரம்ப் சற்று பொத்தாம் பொதுவாக தெரிவித்திருக்கிறார்.

கேந்திர அரசியலில் அமெரிக்க நம்பகத்தன்மை

அமெரிக்காவும் இந்தப் பாதுகாப்பு உத்தரவாதங்களைத் தருமா என்ற கேள்விக்கு சற்று வழுக்கலாகவே பதிலளித்திருக்கிறார் ட்ரம்ப்.

அமெரிக்காவின் விமானப் படைகள் இந்தப்பாதுகாப்பு உத்தரவாதத்தில் பங்கு கொள்ளும், ஆனால் தரைப்படைகள் உக்ரைனில் இருக்காது என்று ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் ட்ரம்ப்.

இது உக்ரைனின் பாதுகாப்புக்கு இனி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பிரிட்டனுமே பொறுப்பு என்று ட்ரம்ப் கைகழுவி விடுவதைப் போலத்தான் இருக்கிறது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தொடர்ந்து வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்காவின் ராணுவத் தலையீட்டை எதிர்த்து வரும் ட்ரம்ப் இந்த நிலைப்பாட்டை எடுப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் இதன் நீண்டகால விளைவு, அமெரிக்காவை ஒரு நம்பத்தகுந்த கூட்டாளியாக பிற மேற்குலக நாடுகள் மட்டுமல்ல , பிற நாடுகளும் பார்ப்பதை நிறுத்திக்கொள்ள வைத்து, சர்வதேச அளவிலான கேந்திர அரசியலில் அமெரிக்காவின் செல்வாக்கைக் குறைக்கும் என்ற கருத்தும் இருக்கிறது.

இதனிடையே , ரஷ்ய அதிபர் புடினுடன் ஜெலன்ஸ்கி சந்திப்புக்கு தான் ஏற்பாடு செய்யப்போவதாக ட்ரம்ப் கூறினாலும் அது உடனடியாக நடக்கும் என்று தோன்றவில்லை.

புடின் - ட்ரம்ப் சந்திப்பு குறித்தும் பின்னர் ஜெலன்ஸ்கி-ட்ரம்ப் சந்திப்பு பற்றியும் கருத்து வெளியிட்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சார்கெய் லாவ்ரோவ் மற்றும் ரஷ்ய ஊடகங்கள் புடின் ஜெலன்ஸ்கியை உடனடியாக சந்திப்பாரா என்பது பற்றி ஏதும் கூறவில்லை.

முதலில் இரு நாடுகளுக்கிடையே மூத்த அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் மட்ட சந்திப்புகள் நடக்கலாம் , அதற்கான தேதி குறிப்பதிலேயெ பல நாட்கள் கடத்தப்படலாம் என்பது மட்டும்தான் இப்போதைக்கு சாத்தியமாகத் தெரிகிறது.

ஆனால் பேச்சுவார்த்தைகளை இழுத்தடித்து, அதனிடையே போரையும் தொடர்ந்து நடத்தும் உத்தியை ரஷ்யா கையாண்டால் அது ட்ரம்பை மேலும் சினம் கொள்ளச் செய்யலாம், அதையும் தவிர்க்க வேண்டும் என்ற கணக்கும் ரஷ்யாவுக்கு இருக்கலாம்.

இந்திய ஏற்றுமதிகள் மீதான அபராத வரி விதிப்பு ரத்தாகுமா ?

இதனிடையே, ரஷ்யா மீது உக்ரைன் போரை அடுத்து அமெரிக்கா விதித்த கடும் பொருளாதாரத் தடைகள் இன்னும் தளர்த்தப்படுவதாகத் தெரியவில்லை. அதுபற்றி புடினும் அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை.

ரஷ்யாவிடம் பொருளாதாரத் தடைகளை மீறி எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் மீது இரண்டாம் நிலை பொருளாதாரத் தடைகளை ( secondary sanctions) விதித்த ட்ரம்ப் அந்த வரிவிதிப்புகளையும் ரத்து செய்வதாக இன்னும் அறிவிக்கவில்லை.

இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மீது 25% வரி விதிப்பும், அதன் பின்னர் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்ததற்காக மேலும் 25 விழுக்காடு அபராத வரி விதிப்பையும் அறிவித்து இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சி தந்தார் ட்ரம்ப். இந்த அபராத வரி வரும் ஆகஸ்டு 27ம் தேதி முதல் அமலாக உள்ள நிலையில், அது அமலானால் அது அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதிகளை மற்ற நாட்டு ஏற்றுமதிகளோடு போட்டி போட முடியாத நிலைக்கு தள்ளிவிடும் என்பதில் ஐயமில்லை.

அமெரிக்கா: இந்தியா மீது 25 சதவிகித வரி விதித்த ட்ரம்ப்
அமெரிக்கா: இந்தியா மீது 25 சதவிகித வரி விதித்த ட்ரம்ப்

ரஷ்ய அதிபரின் அலாஸ்கா சந்திப்பு இந்த பிரச்சனைக்கும் ஒரு முடிவு கட்டும் என்று இந்திய தரப்பில் ஒரு நம்பிக்கை இருந்தது. அது இதுவரை மெய்ப்படவில்லை.

வரும் நாட்களில் அமெரிக்க அரசின் வர்த்தகக்குழு இந்தியாவுக்கு விஜயம் செய்யவிருக்கும் நிலையைல் இரு தரப்புகளும் பேச்சு வார்த்தைள் மூலம் இந்த அபராத வரி மற்றும் முதலில் விதிக்கப்பட்ட 25 % வரி ஆகியவற்றுக்கு ஒரு தீர்வு காணுமா என்பது கேள்விக்குறிதான்.

எது எப்படி இருப்பினும், இப்போதைக்கு அலாஸ்கா சந்திப்பில் ட்ரம்ப்பு தனது சாதனையாகக் கூறிக்கொள்ளும் அளவுக்கு எதையும் காட்ட முடியாத நிலையில்தான் இருக்கிறார்.

அவர் கோரிய போர் நிறுத்தம் ஏற்படவில்லை, புடின் எல்லாப் பிரச்னைகளையும் உள்ளடக்கிய ஒரு ஒட்டு மொத்த அமைதித் தீர்வுக்கு தான் தயார் என்பதை மட்டுமே சொல்லிவிட்டு , அலாஸ்கா சந்திப்பு அமைத்துக்கொடுத்த சர்வதேச வெளிச்சத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

இறுதி ஒப்பந்தம் ஏற்பட இன்னும் பல நாட்களாகலாம். அது வரை போர் நிறுத்தம் ஏற்படாது. உக்ரைனின் துயரங்கள் தொடரும். ரஷ்யாவின் தரப்பிலும் படையினர் உயிரிழப்பு தொடரும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Delhi CM: மனு கொடுக்க வந்த நபர் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல் - என்ன நடந்தது?

மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சிடெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று காலையில் தனது வீட்டில் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியான ஜன் சன்வாய் என்ற நிகழ்ச்சியில் மக்களிடம் குறை கேட்டல் மற்றும் மனுக்களை வாங்கிக்கொண்... மேலும் பார்க்க

Russia - Ukraine போர் நிறுத்த ஒப்பந்தம்; கிரிமியா முக்கியத்துவம் பெறுவது ஏன்?

ட்ரம்ப் முக்கிய நிபந்தனைகடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்துப் பேசிய ட்ரம்ப், அமைதியை ஏற்படுத்த ஒரு ஒப்பந்தத்துக்கு வர முடியும் எனத் தெரிவித்திருந்தார்.உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிய... மேலும் பார்க்க

"நாடாளுமன்ற, சட்டமன்ற செயல்பாடுகளில் உச்ச நீதிமன்றம் தலையிடுகிறது" - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "அதிகபட்சம் மூன்று மாத... மேலும் பார்க்க