ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது நன்றியற்றது: அஸ்வின் ஆதங்கம்!
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாததது குறித்து அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இணைந்து ஆசியக் கோப்பைக்கான அணியை அறிவித்தனர்.
அதன்படி துணை கேப்டனாக, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஷுப்மன் கில், இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஆனால், ஐபிஎல் தொடரில் 600 ரன்களுக்கு மேல் குவித்து தனது அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்ற ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பெறாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய யூடியூப் காணொலியில் பேசுகையில், “ஆசியக் கோப்பைக்கு அணித் தேர்வு செய்ததே நன்றியற்ற வேலை. நீங்கள் அணியில் இருந்து ஒருவரை நீக்குகிறீர்கள் என்றால் அவரது முகத்தில் ஏமாற்றமும், சோகமும் நிறைந்திருக்கும்.
ஷுப்மன் கில் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வானதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், அதே சமயம் ஷ்ரேயாஸ் மற்றும் ஜெய்ஸ்வாலுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன்.
ஷ்ரேயாஸ் அப்படி என்ன தவறு செய்தார்? கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பை வென்று கொடுத்தார். 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். இந்திய அணிக்காக சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்தார்.
ஷ்ரேயாஸ் ஐயரும், ஜெய்ஸ்வாலும் தன்னலமின்றி ஆடுவார்கள், 45 ரன்களில் இருக்கிறார் என்றால், 46, 47 என தட்டி தட்டி விளையாடாமல் தூக்கி அடித்து 46 ரன்களில் ஆட்டமிழந்தாலும் பரவாயில்லை என விளையாடுவார்கள்.
அவ்வாறு ரிஸ்க் எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் இந்திய அணியால். இப்போது ஒருவர் நன்றாக விளையாடவில்லை என நீங்கள் குறிப்பிட்டால் அவர் தங்களுக்காக விளையாடுவார்களா? அல்லது அணிக்காக விளையாடுவார்களா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஐபிஎல் தொடரில், பஞ்சாப் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், கேஎல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
2023 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 530 ரன்கள் குவித்த ஷ்ரேயாஸ் ஐயர், அதன்பின் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார்.
இரானி கோப்பை, ரஞ்சிக் கோப்பை, சையத் முஷ்டாக் அலி கோப்பை, ஐபிஎல் கோப்பை என உள்ளூர் போட்டிகளில் கோப்பை வெல்ல சாம்பியன்ஸ் டிராபி அணியில் சேர்க்கப்பட்டார் ஷ்ரேயாஸ் ஐயர்.
12 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சாம்பியன்ஸ் டிராபி வெல்லவும் ஷ்ரேயாஸ் ஐயர் முக்கிய பங்காற்றினார். இதனால் ஆசிய கோப்பை அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதால், ரசிகர்களும் முன்னாள் வீரர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.